எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நீடிப்பது கடினம்: சிவசேனா சொல்கிறது


எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி நீடிப்பது கடினம்: சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 21 May 2019 7:40 AM IST (Updated: 21 May 2019 7:40 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் உருவாக்கி வரும் மெகா கூட்டணி தேர்தல் முடிவு வெளியாகும் நாளை மறுநாள் மாலை வரை நீடிப்பது கடினம் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கி பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பா.ஜனதா கூட்டணிக்கு சாதகமாகவே வந்துள்ளன.இதுகுறித்து பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி வரும் மெகா கூட்டணியில் குறைந்தது 5 பிரதமர்களாவது இருப்பார்கள் என தெரிகிறது. ஆனால் தற்போது நடக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கையில் அவர்களின் நம்பிக்கை தகர்க்கப்பட உள்ளது. பல்வேறு சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து அரசை வழிநடத்தும் வாய்ப்பை இந்த நாடு ஒருபோதும் வழங்காது.பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எனவே அவர்கள் தங்களுக்கு இணங்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற கடும் உழைப்பை கொட்டி வருகின்றனர்.

குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இதற்கான கடும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் அவரது முயற்சி வீணாக போகிறது. அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை 2 முறை டெல்லியில் சந்தித்து பேசினார்.ஆனால் எதிர்க்கட்சிகள் உருவாக்கி வரும் மெகா கூட்டணி தேர்தல் முடிவு வெளியாகும் 23-ந் தேதி (நாளை மறுநாள்) மாலை வரை நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தங்கள் கணக்கை தொடங்க எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கும் பஞ்சாப், டெல்லி மற்றும் அரியானாவில் இதே சூழ்நிலை தான் நிலவுகிறது. கேரளாவில் இடதுசாரிகள் பலமும் சுருங்கி வருகிறது.

ஆத்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடினமான நேரத்தை எதிர்கொண்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு கடும் போட்டியாக விளங்குகிறார். தெலுங்கானாவிலும் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கூட்டணியை விட டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் பெரிய வெற்றியை பெறுவார் என தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story