திருப்பதி தேவஸ்தான கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்


கபிலேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காலையில் சுப்ரபாதம் பாடி விநாயகரை துயிலெழுப்பி, அதன்பின்னர் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. மாலையில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் மலைப்பாதைகளில் உள்ள கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இரண்டாவது மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோவிலில், காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கீழே இறங்கும் மலைப்பாதையில் உள்ள விநாயகர் சிலைக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


Next Story