வளர்பிறை அஷ்டமி... பைரவரை வழிபட கால நேரம் பார்க்க தேவையில்லை
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில்தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இறைவனை இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்யலாம். இதில் சிவபெருமனின் மறு அம்சமாக இருக்கும் கால பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான்.
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்கவிடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது.
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வணங்கும் பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.
பொதுவாக கால பைரவருக்கு ராகு கால நேரத்தில் பூஜை செய்வது சிறப்பாகும். ஆனால், வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில்தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எனவே, வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் இன்று (11.9.2024) நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். ராகு காலம் போய்விட்டதே என்ற கவலை வேண்டாம்.
பைரவரை வழிபடுவதால் கர்ம வினைகள் கரையத் துவங்கும். ஆறு வளர்பிறை அஷ்டமிகளில் பைரவரை வழிபட்டால், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்குவதுடன், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட சிவாலயம் சென்று பைரவரை தரிசனம் செய்யலாம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional