திருவண்ணாமலை தீபத் திருவிழா- பந்தக்கால் நடப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கின
டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 1-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 4-ம் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும். 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் செய்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது.
இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.