திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்புகள்


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்புகள்
x

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலின் சிறப்புகளை பார்ப்போம்.

* திருக்கழுக்குன்றத்தில் நான்கு வேதங்கள் மலையாகவும், அதன் உச்சியில் சிவபெருமான் சுடர் கொழுந்தாய் - சுயம்பு மூர்த்தியாகவும் எழுந்தருளி இருப்பது சிறப்பு.

* இறைவன் மலையின் உச்சியில் கொழுந்து உருவில் இருப்பதால் இறைவனுக்கு மலைக்கொழுந்து என்றும் பெயருண்டு.

* மாமல்லையை ஆண்ட சுரகுரு சக்கரவர்த்தியால் புதுப்பிக்கப்பெற்ற ஆலயம் தாழக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. தாழ்வரைக் கோவில் என்பது தாழக்கோவில் என மருவிவந்த பெயராகும்.

* இந்த கோவிலில் சங்கு தீர்த்தம் என்ற பெயரில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவது சிறப்பு.

* ருத்திரகோடியர் பூஜித்த கோவில் மலையின் தென்கிழக்கு மூலையில் உருத்திரர் கோவில் எனும் பெயருடன் இருக்கிறது. பலவகைப்பட்ட அசுரர்களை கொன்ற பாவம் நீங்க உருத்திரகோடியரும், பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவம் நீங்க நாராயணரும், சாவித்திரியினால் சபிக்கப்பட்ட பாவம் நீங்க பிரம்மதேவரும் இறைவன் சொல்லை மறுத்த பாவம் நீங்க நந்திதேவரும் மற்றும் எண் வசுக்களும் பிற தேவர்களும் முனிவர்களும் இத்தலத்தை வழிபட்டார்கள்.

* திருஞானசம்பந்தர் மலையை வலம் வந்து தமிழ்மாலை பாடிய தலம். அவர் இறைவன் காதலித்துறையும் இடம் கழுக்குன்றே என்று சிறப்பிக்கின்றார். திருநாவுக்கரசர் "கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்" என்றும் 'கழுக்குன்றத் துச்சியாய் கடவுளே' என்றும் போற்றியுள்ளார். சுந்தரருக்குக் கண்ணொளியும், பொன்னும் அளித்த தலம். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தாம் வழிபட்ட இறைவனது திருவடிகளை, இங்கு வைத்துக் கோவில் கட்டி வழிபட்டார்.

* இத்தலவிருட்சம், வாழை-கதலி. எனவே இத்தலத்தை கதலிவனம் என்றும் அழைக்கிறார்கள்.

* இந்திரன் வழிபட்டதற்கு அடையாளமாக இங்கு மலைமீது இடிவிழுந்து சிவலிங்கத் திருமேனியினைத் திருமஞ்சனம் செய்கிறது. இது குறித்து பல நூல்கள் கூறுகின்றன.


Next Story