ஷோடச கணபதி... வழிபாடும் பலன்களும்


விநாயகரின் ஒவ்வொரு வடிவமும் அவருடைய ஆளுமையின் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் குறிப்பிட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்கிறது.

இந்து சமய கடவுள்களில் பெரும்பாலானோர் வழிபடக்கூடிய முதன்மைக் கடவுள் விநாயகர். எந்த காரியத்தை செய்ய தொடங்கினாலும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கியே தொடங்குவது வழக்கம்.

விநாயகர் பல்வேறு உருவங்களில், பல்வேறு பெயர்களில் காட்சி தருவதை அறிவோம். நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகிலும், தெருக்கோடியிலும், மரத்தடியிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் அருள்பாலிப்பவர் விநாயகர். கணேச புராணத்தில், விநாயகர் வகைகள் 32 ஆக பிரித்து கூறப்பட்டுள்ளது. இதில் பதினாறு வகைகள் 'ஷோடச கணபதி' என்றும், மீதி பதினாறு வகைகள், 'ஏக விம்சதி' என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.

விநாயகரின் ஒவ்வொரு வடிவமும் அவருடைய ஆளுமையின் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் குறிப்பிட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்கிறது.

இதில் முதன்மையான 'ஷோடச கணபதி' விநாயகர்களை பற்றியும், அவர்களை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் பார்ப்போம்.

பால கணபதி

விநாயகப் பெருமானின் குழந்தை வடிவமான பால கணவதி தன் கரங்களில் மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் ஏந்தியிருப்பார். இவர், சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனின் தோற்றம் கொண்டவர். இவை அனைத்தும் பூமியின் வளம் மற்றும் வளத்தைப் பிரதிபலிக்கின்றன. இவரை வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.

தருண கணபதி

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறிந்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக் கரங்களில் ஏந்தியிருப்பவர் இவர். சூரியன் உதிக்கும்போது இருக்கும் செவ்வானத்தின் நிறத்தைக் கொண்டு இளைஞராக அருள்பவர் இவர். இவரை வழிபட்டால் முகக் கலை உண்டாகும்.

பக்த கணபதி

தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தால் செய்யப்பட்ட பாயசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை, தம் நான்கு கரங்களில் ஏந்தியவர் இந்த விநாயகர். இவர் நிலவின் ஒளியைப் போன்ற வெண்ணெய் நிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நல்லவிதமாக அமையும்.

வீர கணபதி

பதினாறு கரங்களைக் கொண்டவர் இவர், வில் மற்றும் அம்பு, வட்டு, வாள், கேடயம், பெரிய சுத்தி, ஈட்டி, கோடாரி, திரிசூலம், கயிறு, தண்டாயுதம், சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி செந்நிற மேனியுடன் ரவுத்ரமாக வீராவேசத்துடன் காணப்படுபவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி

பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர் இந்த விநாயகர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

துவிஜ கணபதி

இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியிருப்பார். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி

பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தியிருப்பார். ஆற்றலைக் குறிக்கும் சித்தி தேவியை உடன் இருத்தியபடி, பொன்னிற மேனியைக் கொண்டவராக அருள்பவர். இவருக்கு 'பிங்கள கணபதி' என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் சகல காரியமும் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி

வீணை, அட்சரமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீலவண்ண மேனியுடைய இவர் தன்னுடைய தேவியை அணைத்தபடி இருப்பவர். இவரை வழிபடுவதால் வாழ்க்கையில் உயர்வும், உயர் பதவிகளும் பெறலாம்.

விக்னராஜ கணபதி

சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி, பொன்னிற மேனியுடன் பிரகாசிப்பவர். இவரை வழிபடுவதால் விவசாயம் செழிக்கும்.

சுப்ர கணபதி

கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும், ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்தியிருப்பார். செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர், விரைந்து அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி

அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சரமாலை, கோடரி, சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ் பெறலாம்.

லட்சுமி கணபதி

பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி, இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் செல்வம் பெருகும்.

மகா கணபதி

பிறை சூடி, மூன்று கண்களுடன் தன் சக்தியான வல்லபையை அணைத்த வண்ணம், கைகளில் மாதுளம்பழம், கதை, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

புவனேச கணபதி

விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால், கஜமுகாசூரன் தன் சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்டவர் இந்த கணபதி. இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வழக்குகள் வெற்றியாகும்.

நிருத்த கணபதி

மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

ஊர்த்துவ கணபதி

பொன்னிற மேனியுடைய இவர், எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional


Next Story