புரட்டாசி மாத சிறப்புகள்


புரட்டாசி மாத சிறப்புகள்
x

புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. புரட்டாசி மாதம், புண்ணியம் தரும் மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசியில் அதிகமான விரதநாட்கள் உள்ளன. சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்பார்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.

பெருமாள் வழிபாடு தவிர, சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடுகளும் புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும். புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம் என்பது நம்பிக்கை.


Next Story