கோபித்துச் சென்ற சித்தரை தேடிச் சென்று சமாதானம் செய்த இறைவன்


இறைவனிடம் கோபித்துச் சென்ற கருவூரார் சித்தர்
x

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத் திருநாளில் காட்சி தரும்படி இறைவனிடம் சித்தர் கேட்டுக் கொண்டார்.

கொங்குநாட்டில் உள்ள கருவூரில் (கரூர்) பிறந்தவர் கருவூர் சித்தர். கருவூரார் என்று அழைக்கப்படும் இவர், இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவர். யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போகரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர். தனது யோக சித்தியால் அற்புதங்களை செய்திருக்கிறார்.

இவர் பல்வேறு இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துவிட்டு தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். பின்னர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றார். அப்போது நிவேதன காலம். இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை சித்தர் அழைத்தும் இறைவனின் தரிசனம் கிடைக்கவில்லை.

இதனால் கோபமடைந்த சித்தர், "அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?" என்று நகைப்புடன் கூறிவிட்டு வெளியேறினார். இவர் இவ்வாறு கூறவும் சுற்றி எருக்கும், வேண்டாத செடிகளும் முளைத்து கோவிலை மறைத்து நின்றன. அங்கிருந்து திரும்பி பாராமல் நடந்தார் சித்தர். அவர் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்து, சித்தரை சமாதானம் செய்து நெல்லைக்கு அழைத்தார். கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு இறைவன் வழங்கியதாக கூறப்படுகிறது.

அதனால் மகிழ்ந்த கருவூர் சித்தர், தனக்கு இறைவன் காட்சி கொடுத்த ஆவணி மூலத் திருநாளில் ஒவ்வொரு வருடமும் காட்சி தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத் திருவிழாவின்போது இறைவன், சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நெல்லையப்பர் தரிசனம் பெற்ற கரூவூர் சித்தர், தன் சாபத்தைத் திரும்ப பெற்றுக் கொண்ட இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று, நெல்லையப்பர் - அம்பாள் மற்றும் கருவூர் சித்தரை தரிசனம் செய்வார்கள்.

கருவூர் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவிலில் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. நெல்லையப்பர் கோவிலிலும் கருவூர் சித்தர் அருள்பாலிக்கிறார்.


Next Story