தாயாரை மடியில் இருத்திய நிலையில் பெருமாள்.. திருமண தடை நீங்க இவரை வழிபடலாம்


லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்
x

பள்ள ஈகை கிராமத்தில் தாயாருடன் அருளும் பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், பள்ள ஈகை. இந்த கிராமத்தில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது.

கோவிலுக்கு வெளியே விளக்குத் தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. ஒரு நிலை ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், நான்கு கால் மண்டபம் காணப்படுகிறது. இந்த ஆலயமானது, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ஆலயத்தின் உள்பகுதியில் இடது புறத்தில் ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது. மேலும் ஆலயத்திற்குள் ஆதிசேஷன் (நாகர்) திருமேனியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், ஸ்ரீதேசிகன் ஆகியோர் அருள்கிறார்கள்.

மூலவரான லட்சுமி நாராயணப் பெருமாள், தனது இடது பக்க மடி மீது மகாலட்சுமி தாயாரை அமர வைத்து, தனது இடது கரத்தால் தாயாரை அணைத்தவாறு காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக ஸ்ரீதேவி- பூதேவி சமேத லட்சுமி நாராயணரின் உற்சவத் திருமேனியும் உள்ளது. அருகிலேயே சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேசிகர் ஆகியோருக்கும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் வீற்றிருக்கும் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு இல்லை. மாறாக ஆலயத்தின் தீபத் தூணில் சிற்பமாக அவர் காணப்படுகிறார்.

தாயாருடன் அருளும் இத்தலப் பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை பிரார்த்திப்பதால், கணவன் - மனைவி ஒன்றுமை ஓங்கும் என்பதும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் நம்பிக்கை. இது தவிர குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகவும், இத்தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை வழிபடுகிறார்கள்.

இந்த கோவிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஒரு கால நித்திய பூஜை தவறாமல் நடைபெறுகிறது.

திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கொத்திமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் பள்ள ஈகை கிராமம் அமைந்துள்ளது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional


Next Story