திருப்பதி பிரம்மோற்சவம்.. ஏழுமலையானை அலங்கரிக்கும் சிறப்பு மாலைகளின் முக்கியத்துவம்
மூலவர் வெங்கடாசலபதிக்கு அலங்கரிக்கப்படும் மலர் மாலைகளில் 8 மாலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
திருப்பதி திருமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல் நாள் மாலையில் (அக்டோபர் 4), வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வ பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, பெரிய ஷேக வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
பிரம்மோற்சவ விழா தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், வெங்கடாசலபதியை அலங்கரிக்கும் பல வண்ண மலர் மாலைகளின் முக்கியத்துவம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தகவலை பார்ப்போம்.
மாலைகள்
ஒவ்வொரு நாளும் வெங்கடாசலபதியை அலங்கரிக்கும் மாலைகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்பட்டவை ஆகும். மூலவர் வெங்கடாசலபதிக்கு அலங்கரிக்கப்படும் மலர் மாலைகள் பல உள்ளன. அதில் 8 மாலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இதுமட்டுமின்றி கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பிற தெய்வங்களுக்கு 100 அடி நீள மலர் அலங்காரமும் அடங்கும். தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் இந்த அலங்காரம் நடக்கிறது.
ஒரு டஜன் வகையான பூக்கள், அரை டஜன் வகையான நறுமண இலைகள் என தினசரி மலர் சேவைகளில் 150 கிலோ வரை பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம் வியாழன் அன்று பூலங்கி சேவைக்கு, மூலவரை அலங்கரிக்க கிட்டத்தட்ட 250 கிலோ பருவ கால பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏழுமலையான் கோவிலில் இந்த மாலைகள் மற்றும் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவில் புராணங்களில் ஒவ்வொரு மலரும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை கொண்டுள்ளன. நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இந்த மாலைகளின் அழகு நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் பெற்ற 8 மாலைகள்
சிகாமணி: கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் வரை அலங்கரிக்கப்பட்ட ஒற்றை மாலை 'சிகாமணி' எனப்படும். இது எட்டு அடி நீளம் கொண்ட பெரிய மாலை ஆகும்.
சாலிகிராமம்: தலா நான்கு அடி நீளம் அளவுள்ள இரண்டு மாலைகள். ஒவ்வொன்றும் மூலவரின் சாலிகிராம ஆரத்தைத் தொட்டு அலங்கரிக்கின்றன. எனவே இதற்கு சாலிகிராம மாலை என்று பெயர்.
கந்தாசாரி: இது வெங்கடாசலபதியின் கழுத்து பகுதியை உள்ளடக்கியதாக அலங்கரிக்கப்படும் மாலை ஆகும். தலா 3.5 அடி நீளத்தில் இரண்டு மாலைகள் அணிவிக்கப்படும்.
வக்ஷதல லட்சுமி: வெங்கடாசலபதியின் தெய்வீக மார்பில் இருபுறமும் இடம் பெற்றுள்ள ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு அலங்கரிக்கப்படும் இரண்டு மாலைகள் இவை. ஒவ்வொரு மாலையும் 1.5 அடி நீளம் கொண்டது.
சங்கு-சக்கர மாலைகள்: வெங்கடாசலபதியின் தெய்வீக ஆயுதங்களான சங்கு மற்றும் சக்கரங்களுக்கு தலா ஒரு அடி நீளமுள்ள மாலை சாத்தி அலங்கரிக்கப்படும். இது சங்கு சக்கர மாலைகள் என்று அழைக்கப்படும்.
கத்தரி சாரம்: இந்த மாலையானது ஏழுமலையானின் நந்தகம் என்ற தெய்வீக ஆயுதத்துக்கு அலங்கரிக்கப்படும். இது இரண்டு அடி நீளம் கொண்டது.
தவலங்கள்: இவை மூலவரின் முழங்கைகள் மற்றும் இடுப்புப் பகுதிகள் இரண்டையும் மறைத்து, புனித பாதங்களை தொடும் அளவுக்கு தொங்கவிடப்படும் மூன்று மாலைகள் ஆகும்.
திருவடி மாலைகள்: இந்த மாலைகள் வெங்கடாசலபதியின் பாதங்களுக்கு பிரத்தியேகமாக அலங்கரிக்கப்படும் மாலைகள் ஆகும்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் மூலவருக்கு அலங்கரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த மாலைகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் மைந்துள்ள புல ஆரா என்ற மலர் அங்காடி அறையில் வைக்கப்படும்.
மூலவர் வெங்கடாசலபதியை அலங்கரிப்பது மட்டுமின்றி, உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி, போக சீனிவாச மூர்த்தி, கொலு சீனிவாச மூர்த்தி மற்றும் அவரது இரு தேவியர்களான ஸ்ரீதேவி, பூதேவி, உக்ர சீனிவாச மூர்த்தி மற்றும் அவரது இரு தேவியர்களான ஸ்ரீதேவி, பூதேவிக்கு தலா ஒரு மலர் மாலை அணிவித்து அலங்கரிக்கப்படுகிறது.
மேலும் சீதா, ராமர், லட்சுமணர், ருக்மணி ஸ்ரீகிருஷ்ணர், சக்ரத்தாழ்வார், அங்கதன், சுக்ரீவர், ஆஞ்சநேயர், அனந்தர், விஷ்வக்சேனர், கருடன், ஜெய-விஜயன், பங்காரு வாக்கிலி கருடாழ்வார், வரதராஜ ஸ்வாமி, வகுளமாதா, ராமானுஜர், யோக நரசிம்மர், பேடி ஆஞ்சநேயர், வராக ஸ்வாமி, கோனிகாட்டு ஆஞ்சநேயருக்கும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகின்றன.