திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.

திருச்செந்தூர்,

ஆவணி திருவிழா முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நேற்று மாலையில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. முன்னதாக வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பரதாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சேதுராமன் அய்யர் கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு, கோவில் தெய்வானை யானையின் மீது அமர்ந்து 8 வீதிகளிலும் உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்பரூப தரிசனம் மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சரியாக 5.40 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது. வருகிற 4-ந் தேதி வரை 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.


Next Story