கூடுதல் வருமானத்துக்கு பெண்கள் செயல்படுத்தும் யுக்திகள்


கூடுதல் வருமானத்துக்கு பெண்கள் செயல்படுத்தும் யுக்திகள்
x
தினத்தந்தி 25 April 2022 11:00 AM IST (Updated: 23 April 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

பரிசு மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு செலவு செய்யாமல், நீங்களே ஒரு பரிசை செய்து வழங்கினால் பணத்தை சேமிக்கலாம். உங்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட பரிசுகள் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

குடும்பத்துக்கு தேவையான நிதியை அதிகரிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது. இதற்காக பெண்களால் பல காலமாக பயன்படுத்தப்படும் யுக்திகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

1) தினசரி செலவுகளை பட்டியலிடுதல்:-
ஒரு சிறிய குறிப்பேடு வைத்து, வாங்கிய பொருட்கள் மற்றும் அதன் விலையை தினசரி குறிப்பிடவும். செலவுகள் துல்லியமாக இருக்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, ‘மளிகைப் பொருட்கள் - ரூபாய் 1000’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிப்பிட முயற்சிக்கவும். இதன் மூலம், நீங்கள் எந்த முக்கியமற்ற பொருட்களை வாங்கியுள்ளீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கலாம். 

2) ஆன்லைன் ஷாப்பிங்கை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல்:-
ஆன்லைன் தளங்களில் வரும் அறிவிப்புகள், சில சமயங்களில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். அவற்றின் மூலம் தேவையில்லாததை வாங்கி வைத்து உபயோகிக்க மறந்து விடுவோம். இந்த சிரமத்தைத் தவிர்க்க, வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை வைத்து ஷாப்பிங் செய்யுங்கள். வெவ்வேறு தளங்களில் உள்ள விலைகளை ஒப்பிட்டு பார்த்தும் செலவுகளை குறைக்கலாம்.

3) வெளியில் அதிகம் உணவு சாப்பிடுவதை தவிர்த்தல்:-
பெரும்பாலானோர் வெளியே சென்று சாப்பிடுவது‌ அல்லது செயலியில் உணவை ஆர்டர் செய்வது போன்றவற்றை செய்வதால், உடல் நலம் பாதிப் படையக் கூடும்; தேவையில்லாத செலவு ஏற்படும். வீட்டில் சமையல் செய்து சாப்பிடுவதன் மூலம், உடல் ஆரோக்கியம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், பணத்தையும் சேமிக்க முடியும்.

4) மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்குதல்:-
மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்குவதால், அவை நீண்ட காலம் இருக்கும். உணவுப் பொருட்கள் சீக்கிரம் தீர்ந்து விடும் என்ற பயம் இருக்காது. இந்த முறையில் நீண்ட காலாவதி தேதிகளைக் கொண்ட பொருட்களை மொத்தமாக வாங்குங்கள். இது போன்று செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

5) சுய-உருவாக்கம்:-
பரிசு மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு செலவு செய்யாமல்,  நீங்களே ஒரு பரிசை செய்து வழங்கினால் பணத்தை சேமிக்கலாம். உங்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட பரிசுகள் உணர்வுப்பூர்வமாக இருக்கும். இது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும். 

மேலும் நீங்கள் அவர்களுக்காக மேற்கொண்ட முயற்சிகளை நினைத்து மகிழ்ச்சி அடைவார்கள்.

பெண்களுக்கு சிறந்த நிர்வாகத் திறன் உள்ளது. ஒரு இல்லத்தரசி, நிதி மேலாளர், செயல்பாட்டு நிர்வாகி, வீட்டு பராமரிப்பு மற்றும் உணவு பொறுப்பு என பலவற்றிலும் சிறந்து விளங்குகிறார். மேற்கண்ட யுக்திகள் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, புதிய வருமானம் ஈட்டவும் முடியும். 

Next Story