சமையல் அறை வடிவமைப்பில் சமரசம் செய்யாதீர்கள்..


சமையல் அறை வடிவமைப்பில் சமரசம் செய்யாதீர்கள்..
x
தினத்தந்தி 18 April 2022 11:29 AM IST (Updated: 18 April 2022 11:29 AM IST)
t-max-icont-min-icon

கிருமி நாசினியான சூரிய ஒளி, சமையல் அறையில் நன்றாக படும்படி ஜன்னல்களை அமைக்க வேண்டும். சமையல் அறையை வண்ணங்கள் நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள்.

30 வயதைக் கடந்த பெண்கள் பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி, மற்ற பாகங்களுக்கும் பரவும். இதற்கு முக்கியமான காரணம் சமையல் அறையை வடிவமைப்பதில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்க்கலாம்.

பல வீடுகளில்  சமையல் அறை மிகவும் சிறியதாக இருக்கும். இத்தகைய சமையலறை அமைப்பு, உணவுப் பொருட்கள் கீழே தவறி விழுவது, சூடான பாத்திரங்களில் கைகளை சுட்டுக் கொள்வது போன்ற விபத்துகள் ஏற்பட காரணமாகிறது. எனவே சமையல் அறையை போதிய இட வசதியோடு அமைப்பது நல்லது.

கிருமி நாசினியான சூரிய ஒளி, சமையல் அறையில் நன்றாக படும்படி ஜன்னல்களை அமைக்க வேண்டும். சமையல் அறையை வண்ணங்கள் நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் அங்கு சமைப்பவர்களின் சிந்தனை மேம்படும். இதற்காக பார்வையை ஈர்க்கும் அழகான இயற்கைக் காட்சி நிறைந்த படங்களை ஒட்டலாம்.

சமையல் அறையில் அமைக்கப்படும் ‘சிங்க்’, பாத்திரங்களைப் போட்டு சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் இடம் என்பதால் அகலமான, ஆழம் குறைந்த, பராமரிக்க எளிதாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். மின்சாதனங்களை இணைப்பதற்கான வசதிகளை சமையல் அறையில் திட்டமிட்டு ஏற்படுத்த வேண்டும். பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ்  அவன் போன்ற சாதனங்களுக்கு தனியாக சுவிட்ச் அமைப்பது அவற்றின் பயன்பாட்டை எளிதாக்கும்.

சமையல் அறையில் போதுமான எண்ணிக்கையில் அலமாரிகள் இருப்பது அவசியம். சமையலறை ‘சிங்க்’ பகுதியில் இருந்து வெளிப்புறம் செல்லும் குழாயை கொசு வலை கொண்டு மூடுவதன் மூலம் எலி, கரப்பான் பூச்சி போன்றவை கிச்சனில் நுழைவதை தடுக்க முடியும்.

சமையலறை வடிவமைப்பில் தரை பகுதிக்கு அடர் நிறங்களில் டைல்ஸ், மாடுலர் கிச்சனுக்கு வெளிர் நிறங்களில் மைக்கா அமைத்தால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். சமையலறை அமைப்பில் சிங்க், அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை  சுலபமாக அணுகி பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். சமையல் மேடையின் உயரம், நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். 

Next Story