சத்தான இனிப்புக் கூடைகளுடன் புகுந்த வீடு செல்லும் மணமகள்
பீகாரில் தயாரிக்கப்படும் இனிப்புகளுக்கும், பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும், சடங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு குறிப்பிட்ட இனிப்புகள் என நிர்ணயித்துள்ளனர்.
இந்தியாவில் திருமணச் சடங்குகள், பல நூற்றாண்டு கடந்தாலும் இன்றும் பாரம்பரியம் மாறாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் பீகாரில் பின்பற்றப்படும் இனிப்புக்கூடை கலாசாரம். திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணமகளுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் சத்தான இனிப்புகள்தான் இதன் சிறப்பு.
இந்தப் பழக்கம் ராமாயண காலத்தில் இருந்து வந்ததே. ராமரைத் திருமணம் செய்து சீதை புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது பல வித இனிப்புகள் அடங்கிய கூடையுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இன்றும் இதைப் பின்பற்றி வருகின்றனர்.
திருமணமாகும் புதுப்பெண், புகுந்த வீடு செல்லும் போது புதிய உறவுகளுடன் ஒன்றிப்போக சில நாட்கள் தேவைப்படும். பசி எடுக்கும் போது, அந்த வீட்டில் உணவைக் கேட்டு உண்பதில் தயக்கம் இருக்கும். பசியால், தன் மகள் வாடாமல் இருக்கவும், அடுத்த பரிமாணத்திற்கு அடியெடுத்து புதிய வாழ்க்கைக்குள் புகும் பெண்ணுக்கு உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கூடை கூடையாக இனிப்புகள் வழங்கப்படும்.
மேலும், இந்த இனிப்புக் கூடைகள், மணமகளின் அறையில் வைக்கப்படும். புகுந்த வீட்டில் உள்ள உறவுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது, அவர்களுக்குள் பிணைப்பு உருவாகும் என்பது ஒரு நம்பிக்கை.
இந்த இனிப்புகளை, அந்தக் காலத்தில் பெண்ணின் வீட்டில் உள்ள பாட்டி, அத்தைகள், தாய் உள்ளிட்ட பெண்கள் தயாரித்தனர். வீட்டிலேயே அரிசியை உரலில் இட்டு இடித்து மாவாக்கி, இதனுடன் வெல்லம், சர்க்கரை, உலர் பழங்கள், நெய், பாலாடைக் கட்டி முதலியவற்றைக் கொண்டே இந்த இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் முக்கியமானது காஜா, கசக், நியூரா மற்றும் புக்கினி போன்ற இனிப்புகள். இவை அனைத்தும் பெண்களுக்குச் சத்து வழங்கும் என்பதுடன், ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது. பீகாரில் தயாரிக்கப்படும் இனிப்புகளுக்கும், பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும், சடங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு குறிப்பிட்ட இனிப்புகள் என நிர்ணயித்துள்ளனர்.
இனிப்புக்கூடையில், உள்ள முக்கியமான இனிப்பு ‘காஜா’. இது, அரிசி மாவு, எண்ணெய், நெய், சர்க்கரைப் பாகு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. செவ்வக வடிவில் இருக்கும் இந்த இனிப்பு 12 முதல் 15 அடுக்குகளைக் கொண்டது. ஆரம்பத்தில், பெரிய அளவில் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு இன்று சிறிய அளவாக மாறிவிட்டது. எண்ணெய்யைத் தவிர்த்து இதே பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும், மற்றொரு இனிப்புக்கு ‘பியாவ்’ என்று பெயர். இது சர்க்கரைப் பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுவதால், 3 மாதங்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.
இனிப்பு வகைகளில் முக்கியமானது மஞ்சள், கறுப்பு மிளகு, சுக்குப் பொடி, பெருஞ்சீரகம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் லட்டு. இந்த இனிப்புகள் அனைத்தும் பெண்ணின் பசியைப் போக்கும் என்பதுடன் முதுகு, கர்ப்பப்பை, எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்பது நம்பிக்கை.
ஆரம்ப காலத்தில், குறைந்தபட்சம் 12 முதல் 15 இனிப்புக் கூடைகள் வரை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
Related Tags :
Next Story