‘சமூகத்திற்காகவும் சிந்திக்க வேண்டும்’ - சுகன்யா


‘சமூகத்திற்காகவும் சிந்திக்க வேண்டும்’ - சுகன்யா
x
தினத்தந்தி 28 March 2022 11:00 AM IST (Updated: 26 March 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

சிறப்புக் குழந்தைகளின் உலகம் அழகானது. அவர்களுடன் கலந்துரையாடுவது, நேரத்தை செலவிடுவது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதைத் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருக்கும் முதியவர்களுடனும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டேன்.

மாறுபட்ட வளர்ச்சி, அறிவாற்றல், குணங்கள் கொண்ட சிறப்புக் குழந்தைகளை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் பல பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையும், சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறார் சுகன்யா. சென்னையைச் சேர்ந்த இவர் தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்...

உங்களைப் பற்றி?
மீனவ குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறுவயது முதலே படிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. பள்ளிப்படிப்பு முடித்த பிறகு பகுதி நேர வேலை செய்துகொண்டே, கல்லூரிப் படிப்பை முடித்தேன். சிறப்புக் கல்வி மற்றும் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். சிறப்புக் குழந்தைகளுக்கான பட்டயப் படிப்புகளையும் முடித்திருக்கிறேன்.

தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
சிறப்புக் குழந்தைகளுக்கு பேச்சு சிகிச்சை அளிக்கும் நிறுவனத்தை, கடந்த 11 வருடங்களாக நடத்தி வருகிறேன். அவர்களுக்கான சிறப்பு ஆசிரியராகவும் பணியாற்றுகிறேன். சிறப்புக் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் மனநல ஆலோசனையும் அளித்து வருகிறேன்.

மேலும் சாலைகளில் ஆதரவின்றி இருக்கும் முதியவர்களை இல்லங்களில் சேர்ப்பது, அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்திசெய்வது போன்ற சேவைகளை தனியாகவும், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செய்து வருகிறேன்.

சமூக சேவையில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?
சிறப்புக் குழந்தைகளின் உலகம் அழகானது. அவர்களுடன் கலந்துரையாடுவது, நேரத்தை செலவிடுவது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதைத் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருக்கும் முதியவர்களுடனும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டேன். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தை சொல்வதற்கு வார்த்தை இல்லை. அன்றிலிருந்து மாநகராட்சியுடன் இணைந்து அவர்களுக்கு தேவையான உதவி களையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன்.



கொரோனா லாக்டவுனில் எத்தகைய பணிகளை மேற்கொண்டீர்கள்?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அவர்களை கவனித்து கொள்பவர்களுக்கும் ஆலோசனை வழங்கினேன். தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனாவால் இறந்த, அடையாளம் தெரியாதவர்களின் உடலுக்கு தக்க மரியாதை செலுத்தி அடக்கம் செய்தோம். மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதி செய்து தருவது, நோயாளிகளுக்கு வழிகாட்டுவது, ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவது, சாலையோர மக்களுக்கு மளிகைப் பொருள் வழங்குவது போன்ற உதவிகளைச் செய்தோம்.

கொரோனா பரவல் காலகட்டத்தில் மறக்க முடியாத சம்பவம்?
கருப்பு பூஞ்சைத் தொற்று  மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபரை, அவரது ஊரில் அடக்கம் செய்வதற்காக நானும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் சென்றோம். போகும் வழியில் எங்கள் வண்டி செயல் இழந்ததால், மிகவும் சிரமப்பட்டு இன்னொரு வண்டி மூலம் அங்கு சென்றடைந்தோம். இறந்த நபரின் சொந்த மகனே பத்து அடி தூரம் தள்ளி நின்றுதான் எங்களை அழைத்துச் சென்றார். பின்பு இறந்தவருக்கு தக்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தோம். அதுபோல மனைவி கொரோனாவால் இறந்ததால், அவரது கணவர் தனது குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தார். எனவே தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து உடலை அடக்கம் செய்வதற்குத் தூக்கிச் சென்றோம். அவர்களது உறவினர்கள் கூட உதவ முன்வரவில்லை. வழக்கமான பாதையில் செல்ல விடாமல், எங்களை மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்லுமாறு கூறினர். அது மிகவும் வேதனையாக இருந்தது. 

கல்வியில் சந்தித்த இடர்பாடுகள் என்ன?
உயர்கல்வி படிக்கும் விருப்பத்தை என் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவர்கள் சம்மதிக்கவில்லை. நிதிப்பற்றாக்குறையால் கல்வி எனக்கு எட்டாக்கனியாக இருந்தது. எனது சொந்த முயற்சியாலேயே அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் படித்து முடித்தேன். இப்பொழுது தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசவும், பிறருக்குச் சொல்லிக் கொடுக்கவும் என்னால் முடியும்.

நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி?
தமிழ்நாடு பெண் சாதனையாளர் விருது 2021, சுயசக்தி விருது, சிறந்த ஆலோசகர் விருது, கோவிட் 19 ரியல் ஹீரோ அங்கீகார விருது, பாரதி கண்ட புதுமைப்பெண்கள் விருது (பெண் சாதனையாளர்கள் விருது), செம்மை மாதர் 2021 போன்ற விருதுகள் பெற்றிருக்கிறேன்.

உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?
சிறப்புக் குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி அமைப்பு ஆரம்பித்து, அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு வழி செய்து கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்.

பெற்றோருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
குழந்தைகள் இரண்டு வயது முடிந்த பிறகும் பேசவில்லை என்றால், ஏதோ ஒரு தடங்கல் குழந்தையிடம் உள்ளது என்று அர்த்தம். எனவே தகுந்த மருத்துவரையோ, ஆலோசகரையோ அணுக வேண்டும். சாதாரண குழந்தைக்கு 5 முறை சொல்லி கொடுப்பது போல, சிறப்புக் குழந்தைகளுக்கு 20 முறை சொன்னால் புரிந்து விடும். அதை உணர்ந்து அந்தக் குழந்தைகளையும் அரவணைத்து வளர்க்க வேண்டும்.

பெண்களுக்கென்று தனித்துவமான வலிமை இருக்கிறது. அதனை வெளிக்கொண்டு வந்து, அவர்களின் கனவு மற்றும் லட்சியங்களை நிறைவேற்றுவது அவர்கள் கையில்தான் உள்ளது. அனைவரும் தனது குடும்பம், தனது வேலை என்று இருக்காமல், சமூகத்திற்காகவும் சிந்திக்க வேண்டும். உதவி தேவைப்படுபவர்களுக்கு கை கொடுக்காவிட்டாலும், குரலாவது கொடுக்க வேண்டும். 

Next Story