குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறீர்களா?
கடற்கரையில் யாரேனும் தின்பண்டங்கள் கொடுத்தால் அதை வாங்கிச் சாப்பிடக்கூடாது என்று அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
வார இறுதி நாட்கள் மற்றும் திருவிழா சமயங்களில் குழந்தைகளை பொருட்காட்சி, பூங்கா, திரையரங்கு, கடற்கரை போன்ற இடங்களுக்கு பெற்றோர் அழைத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு, கடற்கரைக்குச் செல்லும் சமயங்களில் குழந்தைகளின் வயதுக்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
வீட்டில் இருந்து புறப்படும்போது குழந்தைகளிடம் கடற்கரையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தெளிவாக எடுத்துக் கூறுங்கள். சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் கிரீம் பூசிக்கொண்டு செல்ல வேண்டும். கடற்கரை மணலில் புதைந்திருக்கும் பொருட்களை கையில் எடுத்து விளையாடக் கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கடற்கரையில் யாரேனும் தின்பண்டங்கள் கொடுத்தால் அதை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். கடற்கரையில் விற்கப்படும் பல்வேறு தின்பண்டங்களை சாப்பிட குழந்தைகள் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் அவர்களது உடல்நலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
குழந்தைகள் கடல் நீரில் விளையாடும்போது பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அலைகளின் வேகமும், உயரமும் அதிகமாக இருக்கும். அதனால் அவர்களது கைகளைப் பிடித்துக்கொண்டு அலைகளில் விளையாடுவதே பாதுகாப்பானது. அவர்கள் கரையில் அமர்ந்து விளையாடினாலும், அருகிலேயே இருந்து பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்களின் செல்போன் எண்களை குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும். எதிர்பாராமல் அவர்கள் வழிதவறிவிட்டால், செல்போன் எண்ணை அருகில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்து தொடர்புகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் கடற்கரைக்குச் செல்லும்போது கூடுதலாக ஆடைகளை எடுத்துச்செல்வது நல்லது. மதியமே கிளம்புவதாக இருந்தால் குழந்தைகளின் குடை, தொப்பி ஆகியவற்றுடன் கண்டிப்பாக குடிநீர் பாட்டிலையும் கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் அவர்கள் தண்ணீரில் விளையாடுவதற்கு ஏதுவான செருப்புகளை அணிவித்து அழைத்துச் செல்லலாம்.
கடற்கரையில் குதிரை சவாரி, குடை ராட்டினம் போன்றவற்றில் குழந்தைகள் விளையாட விரும்பினால், அதிக கூட்டம் இல்லாத சமயத்தில் மட்டுமே அனுமதியுங்கள். கொரோனா தொற்று முற்றிலும் விலகாத நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றுவது சிறந்தது.
Related Tags :
Next Story