உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சைக்கிள் பயிற்சி உதவும் - ஜெரினா


உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சைக்கிள் பயிற்சி உதவும் - ஜெரினா
x
தினத்தந்தி 7 Feb 2022 11:00 AM IST (Updated: 5 Feb 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

காலை முதல் மாலை வரை இருக்கையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதன் மூலம் முதுகுப் பகுதியில் ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் வலியால் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டத்தைச் சீராக வைப்பதற்கு உதவும்.

ரு பெண் சாதிப்பதற்கு திருமணம், குழந்தை ஆகியவை தடையில்லை என்பதை, தனது வாழ்வில் பல சோதனைகளைத் தாண்டி  நிரூபித்துள்ளார். ஜெரினா ஜான். இவர் கணினி அறிவியலில் எம்.பில்., பட்டம் பெற்றவர். சொந்தமாக சைக்கிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் பிட்னஸின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தனது வாழ்க்கை அனுபவங்களை  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

உங்களைப் பற்றி?
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாசரேத் தான் எனது ஊர். எனது அம்மா இயற்பியல் ஆசிரியர், அப்பா அரசு அதிகாரி. எனது கணவர் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

உங்களது இளமை பருவம் பற்றி?
பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி இளங்கலை பட்டப்படிப்பை நாசரேத்திலும், முதுகலை பட்டப்படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்திலும், எம்.பில்., படிப்பை தனியார் கல்லூரியிலும் முடித்தேன்.

எனது அனைத்து முடிவுகளுக்கும் எனது குடும்பத்தினர் ஆதரவாக இருந்தனர். இது எதிர்காலத்தில் எனக்கு எது தேவை என்பதை, நானே சிந்தித்து செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்தது.

தனியாக தொழில் தொடங்குவதற்கான எண்ணம் எப்போது வந்தது?
கல்லூரி படிப்பை முடித்த பின்பு சில மாதங்கள் ஐ.டி துறையில் பணியாற்றினேன். விருப்பம் இல்லாததால் அந்த வேலையில் இருந்து விலகி விட்டேன். அதன் பின்னர் திருமணம் மற்றும் குடும்பச்சூழல் காரணமாக வேலையைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் வேலைக்கு போகலாம் என யோசித்தபோது, எனது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.

எனக்கு இளம் வயது முதலே சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது குறித்து என் கணவரிடம் ஆலோசித்தபோது ‘சைக்கிள் நிறுவனம்’ ஆரம்பிக்கலாம் எனத் தோன்றியது.

இது போன்ற தொழில்களை ஆண்கள்தான் அதிகமாகத் தொடங்குவார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
எந்த தொழில் தொடங்குவதற்கும் ஆண்-பெண் என்ற பாகுபாடு இல்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதற்கான முழு உழைப்பை கொடுத்தால், அதில் வெற்றி உறுதி. உழைப்பிற்கும், வெற்றிக்கும் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது.



நீங்கள் சைக்கிள் நிறுவனம் தொடங்குவது பற்றி சொன்னதும், உங்கள் குடும்பத்தினரின் பதில் என்னவாக இருந்தது?
நான் சிறுவயது முதலே எனது பெற்றோரை சார்ந்தே வளர்ந்தேன். திருமணத்திற்கு பின்னரும்கூட தனியாக எங்கும் சென்றது கிடையாது. முதன்முதலில் தொழில் தொடங்கும் எண்ணத்தை பெற்றோரிடம் சொன்ன பொழுது அவர்கள் அதை நம்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பேசி அனைவரையும் சம்மதிக்க வைத்தேன். இப்போது என் குடும்பத்தினர் என் செயல்பாடுகளைப் பார்த்து பெருமிதம் அடைகின்றனர்.

என் கணவரும், நான் அவரது துணையின்றி சிறப்பாக நடத்துவதாக பெருமையாக அனைவரிடமும் சொல்கிறார்.

பெண்ணாக இது போன்ற தொழில் முனைவோராக இருப்பதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?
சைக்கிள் சார்ந்த துறை உனக்கு எதற்கு என்ற கேள்விகள் மட்டுமே ஆரம்பத்தில் இருந்தன. மற்றபடி எனக்கு ஆதரவாகவே அனைவரும் இருந்தனர்.

எதிர்மறையான கருத்துகள் மிகவும் குறைவாகவே இருந்ததால் அவை என்னை பெரிதும் பாதிக்கவில்லை. என்னைச் சுற்றி இருந்தவர்களின் ஆதரவு எனக்கு பெரும் பலமாக இருந்தது.

உங்கள் தொழிலில் எந்த அளவுக்கு நீங்கள் சமூகம் சார்ந்து செயல்பட முடியும்?
சைக்கிள் பயிற்சி, மிகவும் குறைவான பொருட் செலவில் நமது உடல் நலத்தை பேணி பார்த்துக்கொள்ள உதவும் வழியாகும். நாம் செய்யும் தொழில் வியாபார நோக்கத்துடன் இருந்தாலும், அதனால் மக்கள் பயனடைய வேண்டும் என்பது எனது குறிக்கோள்.

சைக்கிள் வாங்கி சென்ற பின் வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கூறும் பொழுதும், இன்ஸ்டாகிராமில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பொழுதும் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சியைப் பணத்தால் கொடுக்க முடியாது.

சிறு குழந்தையின் தாயாக இருந்து கொண்டு, தொழில் முயற்சியை எவ்வாறு மேற்கொள்ள முடிகிறது?
எனக்கு தொழில் தொடங்கும் ஆர்வம் வந்ததும் நான் தயங்கிய விஷயம் என்றால், அது என் பெண் குழந்தையை நினைத்துதான். எல்லா நேரமும் அவளை என்னுடன் கூட்டிச் செல்வது என்பது இயலாத காரியம். ஆனால் அவள் வேறு விதமாக நடந்து கொண்டாள்.

நான் செல்லும்போது என்னை சிரித்துக் கொண்டே வழியனுப்பினாள். அவள் மழலை மொழியில் “பார்த்து போ”, “காரை நல்லா ஒட்டு’’ எனக் கூறினாள்.

என் கணவருக்கு இரவு நேர வேலை என்பதால், பகலில் அவளைக் கவனித்துக்கொள்வார். எனவே எந்த பயமும் இல்லாமல், நான் என் வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.

சைக்கிள் பயிற்சி பெண்களுக்கு எந்த வகையில் உதவுகிறது?
இன்றைய நிலையில் நிறைய பெண்கள் அலுவலகப் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் உடலுழைப்பு குறைவாகவே உள்ளது. காலை முதல் மாலை வரை இருக்கையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதன் மூலம் முதுகுப் பகுதியில் ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் வலியால் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டத்தைச் சீராக வைப்பதற்கு உதவும். 

சைக்கிள் ஓட்டுவதில் பெண்களின் ஆர்வம் எவ்வாறு இருக்கிறது?
ஆண்களை விட, பெண்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும் இன்று அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக கல்லூரி செல்லும் பெண்களுக்கு அதிக அளவில் ஆர்வம் உள்ளது. திருமணத்திற்கு பிறகும்கூட தங்களை சரியான உடல் வாகுடன் வைத்துக்கொள்ளும் ஆசை, பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருவது நல்லது.

Next Story