ஓட்டத்தை பொறுத்து பணம் கட்டுவார்கள் 'சினிமா ஒரு குதிரை ரேஸ் மாதிரி' மனம் திறக்கிறார் பரத்


ஓட்டத்தை பொறுத்து பணம் கட்டுவார்கள் சினிமா ஒரு குதிரை ரேஸ் மாதிரி மனம் திறக்கிறார் பரத்
x

'பாய்ஸ்' படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர், பரத். 3-வது படத்திலேயே வில்லன் அவதாரம் எடுத்தார். 'காதல்' படத்தில் கவனம் ஈர்த்தார். கல்லூரி மாணவன், வில்லன், பணக்கார இளைஞர், நடுத்தர குடும்பத்து வாலிபர் என பார்க்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும் ஒரு முகம், பரத்.

சினிமாவில் 20 ஆண்டுகளை தாண்டி இன்னும் ரசிகர்கள் விரும்பும் முகமாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான 'லவ்' படத் தின் மூலம் மீண்டும் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்திருக்கிறார்.

மனதில் உள்ள விஷயங்களை அவரை நேரில் சந்தித்தபோது கொட்டினார். 'தினத்தந்தி'க்காக 'சின்னத்தளபதி' பரத்தின் பிரத்யேக பேட்டி வருமாறு:-

* பரத் என்றாலே 'காதல்' படம் தான் நினைவுக்கு வருகிறது...

அது மறக்க முடியாத படம். அந்த படம் தான் எனது அஸ்திவாரம்.

* சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளில் என்ன கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?

அதீத பொறுமை. சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு கிடைத்த வெற்றிகளை பார்த்து வியந்தேன். பிறகு சில படங்கள் தோல்வி அடைந்தன. அப்போது தான் புரிந்தது, எனக்குள் இருந்தது அறியாமை என்று. சினிமாவில் வெற்றிகளும், தோல்விகளும் சாதாரணமே என்பதை பிறகு தான் புரிந்துகொண்டேன். எனவே இந்த 20 ஆண்டு சினிமா பயணத்தில் நான் பொறுமையை அதிகமாக கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

* இப்போது பக்குவப்பட்டு விட்டீர்களா?

எந்தளவு வெற்றியை எடுத்து கொண்டாடுகிறோமோ, அதே அளவு தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் தேவை என்பதை புரிஞ்சுகிட்டேன்.

* 'லவ்' படத்தில் வாணி போஜனுடனான 'கெமிஸ்ட்ரி' எப்படி?



ஏற்கனவே வாணி போஜனுடன், 'மிரள்' படத்தில் நடித்திருக்கிறேன். 'லவ்' கதையை பொறுத்தவரையில், ஹீரோவுக்கு சரிசமமாக ஒரு கைதேர்ந்த நடிப்பை வழங்கக்கூடிய ஹீரோயின் தேவைப்பட்டார். உடனே ஒட்டுமொத்த படக்குழுவும் வாணி போஜன் பெயரை பரிந்துரைத்தது. ஏன், படத்தின் டைட்டில் கார்டில் கூட எனது பெயருடன், வாணி போஜன் பெயரும் போடப்பட்டது. இது அவரது நடிப்புக்கு கிடைத்த சான்று. எங்களுக்குள் ஒரு நல்ல நட்பும், புரிதலும் இருக்கிறது. அப்படி இருந்தால் தான் இதுபோன்ற படங்கள் பண்ணமுடியும். ரொமான்ஸ் காட்சிகளில் செயற்கைத்தனம் இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.

* உங்களை திரையில் அறிமுகப்படுத்திய ஷங்கர் மறுபடியும் அழைத்தால்...

நான் இங்கு இருப்பதற்கு காரணம், என் குரு எல்லாமே ஷங்கர் சார் தான். அவர் மூலமாகத்தான் 'காதல்', 'வெயில்' படங்களில் நடிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அவரிடம் இருந்து ஒரு போன் வந்தால் போதும், அவரிடம் ஓடோடி சென்றுவிடுவேன்.

* எப்போது பெரிய 'பட்ஜெட்' படங்களில் நடிப்பீர்கள்?

காலம் தான் அதை முடிவு செய்யவேண்டும். ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். காதல் படம் போல இன்னொரு சூப்பர்ஹிட் படம் தரவேண்டும். 'பரத் பிச்சுட்டாண்டா...' என்று ரசிகர்கள் பாராட்டி புகழ்ந்தால் மட்டுமே, நான் பெரிய 'பட்ஜெட்' படங்களில் நடிக்க முடியும்.

* விமர்சனங்களையும், அவமானங்களையும் எளிதாக எடுத்துக்கொள்கிறீர்களே...

தொழிலில் பக்தியும், பயமும் இருந்தால் மட்டுமே மனரீதியாக நாம் வலிமையாக இருக்கமுடியும். போனால் போகட்டும், பார்த்துகலாம் என்ற 'மைண்ட்செட்' வந்துச்சுனா சினிமாவில் இருக்கவே முடியாது. சினிமா ஒரு குதிரை ரேஸ் மாதிரி. குதிரை ஓடிக்கொண்டிருக்கும் வரையில் தான் அதன் மீது பந்தயம் கட்டி பணம் போடுவார்கள்.

* அடுத்து என்ன படம் நடிக்கிறீர்கள்?



'காளிதாஸ்' மாதிரி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடிக்கிறேன். ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. 'தலைமை செயலகம்' என பெயர் வைத்திருக்கிறார்கள். இது அரசியல் தாக்கங்கள் நிறைந்த சமூக அக்கறையுள்ள படம்.

* தலைமை செயலகத்திலேயே கை வைக்கீறீங்களே...

தலைவா... அது படத்தின் டைட்டில் தான். படத்தில் ஸ்ரேயா ரெட்டி, கிஷோர், ரம்யா நம்பீசன், தர்ஷா குப்தா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

* என்ன மாதிரியான படம் நடிக்க ஆசை?

போலீஸ் கெட்டப்பில் நடிக்க ஆசை தான். ஆனால் அதற்கேற்ற கதை அமையவேண்டும். சும்மா யூனிபார்ம் போட்டுக்கிட்டு, பெரிய மீசை வச்சுக்கிட்டா மட்டும் போதாது. ஒரு 'வைப்' வேண்டும். இன்னும் சொல்லப்போனால் 'தீரன்' மாதிரி ஒரு படம் பண்ண ஆசை இருக்கு.

* சினிமாவில் அடையவேண்டிய லட்சியம் என்ன?

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும். இப்படியே இருந்துவிடாமல், அடுத்த லெவலில் அதாவது இப்போது உள்ளதை காட்டிலும் கொஞ்சம் பெரிய 'பட்ஜெட்' படங்களில் நடிக்கும் நிலைக்கு செல்லவேண்டும். இந்த நிலைக்கு வருவதற்கே 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னும் போகவேண்டிய தூரம் இருக்கு.

* மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பீர்களா?

'செல்லமே' படத்தில் வில்லனாக நடித்துள்ளேன். மெயின் ஹீரோ ரோலை இன்னொரு நடிகருடன் பகிர்வதில் எனக்கு பிரச்சினையே இல்லை. நல்ல கதாபாத்திரமும், கதையும் இருந்தால் நான் எதற்கும் ரெடி தான்.



* காதல் பற்றி...

காதல் என்பதே புரிதல் தான். அந்த புரிதல் தான் காதலை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்று கரை சேர்க்கும்.

* குடும்பம் பற்றி சொல்லுங்களேன்...

என் அப்பாவும், அம்மாவும் எனக்கு மிகப்பெரிய 'சப்போர்ட்' ஆக இருக்கிறார்கள். அதேபோல எனது மனைவியும் எனக்கு மிகப்பெரிய துணை, பலமும் கூட. அழகான இரு குழந்தைகள். மகிழ்ச்சி பரவியிருக்கிறது.

* சினிமாவில் உங்கள் வேகம் எப்படி இருக்கிறது?

எனக்கு சினிமா பேக்கிரவுண்ட் இல்லை. அப்படி 'பேக்கிரவுண்ட்' இருந்து, எனக்கு ஒரு பிடிமானம் இருந்தால் இந்த 10 ஆண்டுகளில் நான் எங்கேயோ இருந்திருப்பேன். பிடிமானம் இல்லாத காரணத்தினால் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

* நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?

மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தவறே கிடையாது.

* நீங்கள் நடனத்தில் அசத்தும் நடிகர். ஏன் சமீபகாலமாக நடனத்தில் ஜொலிக்கவில்லை?

'டான்ஸ்' மூலமாகத்தன் எனக்கு 'சின்னத்தளபதி' என்ற பட்டத்தையே ரசிகர்கள் கொடுத்தார்கள். ஆனால் அடுத்தடுத்து எனக்கு அமைந்த படங்கள் எதார்த்தமானவை என்பதால் பெரியளவில் அதில் 'டான்ஸ்' பண்ண முடியவில்லை. கூடிய சீக்கிரம் டான்ஸ் மையப்படுத்தி ஒரு படம் நடிக்க ஆசை இருக்கிறது.

* தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

தமிழ் சினிமாவுக்கு என்ன குறைச்சல்? நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை திறமையான இயக்குனர்கள் வருகிறார்கள். நடிகர்களின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணருகிறார்கள். அதற்கு மேல் என்ன வேண்டும்?

* பலம், பலவீனம்...

பொறுமை என்னோட பலம். எல்லோரையும் எளிதில் நம்புவது தான் பலவீனம்

* நிஜ வாழ்க்கையில் பரத் எப்படி?

நிஜ வாழ்க்கையில் நான் ரொம்ப ஜாலி டைப். என்னுடன் 10 நிமிடம் பேசினாலே 10 ஆண்டு கால நண்பரிடம் பேசுவது போல உணர்வு நிச்சயம் ஏற்படும்.

* உங்களுக்கே உங்களிடம் யோசிக்க வைக்கும் விஷயம்?

மனதில் பட்டதை 'பட்'டென சொல்லிவிடுவேன்.

* மறக்க முடியாத நாள்...

ஆகஸ்டு 17, 2004. 'காதல்' படம் ரிலீசானது. என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாள் அது.

இவ்வாறு ஜாலியாக பேசி விடைகொடுத்தார், பரத்.


Next Story