"சினிமாவில் ரசிக்கும்படியான கவர்ச்சி தவறு கிடையாது'' - 'டஸ்கி பியூட்டி' ஐஸ்வர்யா ராஜேஷ்


சினிமாவில் ரசிக்கும்படியான கவர்ச்சி தவறு கிடையாது - டஸ்கி பியூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்
x

பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, ஐ.டி. ஊழியர், இல்லத்தரசி, பக்கத்து வீட்டு பெண்மணி, 2 குழந்தைகளுக்கு தாய் என அனைத்து விதமான கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான முகம் யாராக இருக்கும் என்று நினைத்தாலே, ஒரு ஜில்லிப்பு மேலிடும். அட, அது வேறு யாரும் இல்லைங்க... நம்ம 'டஸ்கி பியூட்டி' ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

எதார்த்த நடிப்பின் மூலம் 'நம்ம வீட்டு பிள்ளை'யாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிப்பில் மட்டுமல்ல, பேசுவதிலும் கெட்டிக்காரர்.

சினிமாவில் நிறம் ஒரு பொருட்டல்ல, திறமையாலும் கோலோச்ச முடியும் என்பதற்கு அடையாளமாக திகழும் ஐஸ்வர்யா ராஜேஷ், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜொலித்து வெள்ளித்திரையில் பிரகாசித்து கொண்டிருக்கிறார். கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவர், படுபிசியான சூழலிலும் 'தினத்தந்தி' நட்சத்திர பேட்டி பகுதிக்கு ஆர்வத்துடன் பேட்டி அளித்தார். தனது சினிமா பயணம், காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக மனம் திறந்து பேசினார்.

* சினிமாவில் உங்க 'என்ட்ரி' எப்படி?



'ரம்பந்து' என்ற தெலுங்கு படம் தான் எனக்கு முதல் படம். அதில் குழந்தை கதாபாத்திரம். தமிழில் ஒரு சில படங்கள் நடிச்சிருந்தாலும் 'அட்டகத்தி' படத்துக்கு பிறகு தான் எனக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சது. இதற்கெல்லாம் முன்பாக சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியை சில நாட்கள் தொகுத்து வழங்கினேன். பின்னர் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் கிடைச்சது. 'அட்டகத்தி' போலவே 'காக்கா முட்டை' படமும் எனக்கு ஒரு 'பிரேக்' கொடுத்த படம்.

* இமேஜ் பார்க்காமல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கிறீர்களே, எப்படி?

இது அப்படியே தொடரணும் என்பது தான் என் ஆசை.

* இப்போ என்னென்ன படங்களில் நடிச்சுட்டு இருக்கீங்க...



ஜி.வி.பிரகாஷூடன் 'டியர்' படத்தில் நடிச்சுட்டு வரேன். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகுது. இது ஒரு 'காமெடி - எமோஷனல் டிராமா'. குடும்பத்துடன் கண்டு களிக்கும் வகையில் ஜாலியான பொழுதுபோக்கு படம் இது. இந்த படத்தில் ஹீரோயினுக்கு குறட்டை பிரச்சினை இருக்கு. பொதுவா ஹீரோயின் என்றாலே இந்தெந்த கேரக்டர் தான் பண்ணுவாங்கன்னு ஒரு 'மைண்ட்செட்' இருக்கு. குறட்டை என்பது ஒரு பொதுவான விஷயம். இந்த விஷயத்தை ஹீரோயின்கள் தொட்டது கிடையாது. இருந்தாலும் கதை நன்றாக இருந்ததால், எல்லா தயக்கங்களையும் உடைச்சுட்டு இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டேன். 'செத்தும் ஆயிரம் பொன்' படம் எடுத்த ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இது 2-வது படம். இந்தப் படத்தை செப்டம்பரில் வெளியிடுகிறார்கள். இதுதவிர மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜூடன் ஒரு படத்திலும், டொமினோ தாமசுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன்.

* உங்க பேமிலி பத்தி சொல்லுங்க...

நான், அம்மா, அண்ணா, அண்ணி, அவங்களோட குழந்தை. அழகான குடும்பம், அளவு கடந்த மகிழ்ச்சி. அவ்வளவு தான்.




* உங்களை தவிர உங்கள் குடும்பத்துல சினிமாவுக்கு யாரெல்லாம் வந்துருக்காங்க...

அப்பா சினிமாவில் இருந்தாரு... என் சின்ன வயசுலேயே அவரு இறந்துட்டாரு... தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் காமெடி கேரக்டரில் என் அத்தை நடிச்சிருக்காங்க... ஆனால் இதுமட்டுமே சினிமாவுக்கான எனது அடித்தளம்னு சொல்லமுடியாது.

* 'பிரீ டைம்'ல என்ன செய்வீங்க...

சூட்டிங் இல்லாத டைம்ல இயக்குனர்களிடம் கதை கேட்பேன். வீட்டில் சின்னச் சின்ன வேலை செய்வேன். டி.வி.யில் படம் பார்ப்பேன். அண்ணனின் சுட்டிப் பையனுடன் உற்சாகமாக விளையாடி பொழுதை கழிப்பேன்.

* கதாநாயகிக்கு முக்கியத் துவம் உள்ள படங்களிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்க... ஏதாவது மாஸ்டர் பிளானா?

எந்த பிளானும் இல்லைங்க... 'டிரைவர் ஜமுனா', 'சொப்பன சுந்தரி', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்கள் எதார்த்த வாழ்க்கையில் மக்களை 'கனெக்ட்' பண்ற மாதிரி இருக்கும். சமீபத்தில் நான் துபாய் சென்றபோது, அங்குள்ள பெண்கள் என்னை சந்தித்து 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை பாராட்டி பேசினாங்க. பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்ய பிறந்தவர்கள் போல பாவிப்பது, நம்மூரில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இருக்கிறதே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.

சினிமாவை பார்த்து இளைய தலைமுறையினர் நிறைய கத்துப்பாங்க. எனவே எதை நாம் சினிமா வழியாக சொல்லணும் என்பது ரொம்ப முக்கியம்.

* எப்படியாவது இவர் கூட நடிச்சுடனும்பா... அப்படின்னு நீங்க நினைக்கும் நடிகர் யாரு?

எனக்கு ரஜினி சார் கூட நடிக்கணும்னு ஆசை. அவரது படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா போதும், ரொம்ப சந்தோ ஷப்படுவேன். அதேபோல விஜய் சார் கூட நடிக்கவும் ஆசைப்படுறேன். கொரோனாவுக்கு பிறகு சினிமா மீண்டு கொண்டிருக்கு. இன்னமும் சினிமா முன்னேற வேண்டும். நல்ல படங்களில் நடிக்க வேண்டும்.

*'தீரா காதல்' படத்தில் முதன்முறையாக வில்லத்தனத்தில் கொஞ்சம் மிரட்டிட்டீங்களே...

கேரக்டர் புடிச்சா போதும், வில்லி என்பதெல்லாம் பார்ப்பதே கிடையாது. எனக்கு பிடிச்சா போதும் நிச்சயம் அந்த கதையை ஒத்துப்பேன். கதாபாத்திரத்தில் இறங்கி செய்வேன்.

* நீங்க நல்லா சாப்பிடக்கூடிய ஆளுனு தெரியும். ஆனாலும் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கீங்களே...

ஒரு 'டயட்'டும் நான் பாலோ பண்றதில்லை, அது தான் காரணம் (சிரிக்கிறார்). பிடிச்சதை சாப்பிடுவேன், அளவா சாப்பிடு வேன். அவ்வளவு தான்.

* 'வடசென்னை' படத்தில் கெட்ட வார்த்தை பேசி நடித்த அனுபவம் எப்படி?



எது செய்தாலும் ரசிக்கும்படி செய்ய வேண்டும். நான் கெட்டவார்த்தை பேசினாலும் ரசிகர்கள் அதை ரசிச்சாங்களே... 'என்னடா தம்பி... பயமா.... அடிங்...' என்ற வசனமெல்லாம் ரொம்பவே ரீச் ஆச்சு. இதுதான் கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் உள்ள வித்தியாசம். அந்த படம் வந்தபோது, 'ரொம்ப அழகா பேசியிருக்கப்பா...' என நிறைய பேரு என்னை பாராட்டினாங்க. கெட்டவார்த்தை பேசும் போது சில சங்கடம் இருந்தது. ஆனாலும் அது வெற்றிமாறன் படமாச்சே... படத்தை மிஸ் பண்ண விரும்பல... அதான் துணிஞ்சு நடிச்சேன்.

* 'காக்கா முட்டை' படத்துல 2 குழந்தைகளுக்கு அம்மாவாக எப்படி நடிச்சீங்க... 'இமேஜ்' பாதிக்குமேனு யோசிச்சீங்களா?

பதில்: ஒன்னு களத்தில் இறங்கணும். இல்லைனா இறங்காமலேயே இருந்துடணும். களத்துக்கு வந்துட்டா இறங்கி வேலை செய்யணும். இதுதான் என் பாலிசி. இருந்தாலும் இந்த படத்துல நடிக்க கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் முடிவு பண்ணி இறங்கிட்டேன். இது என் வாழ்க்கையில் நான் எடுத்த ரொம்ப முக்கியமான முடிவுன்னு நினைக்கிறேன். சில முடிவுகள் சரியா இருக்கலாம். சில முடிவுகள் தவறா போகலாம். ஆனால் இந்த முடிவை எடுத்திருக்கலாமேன்னு என்னைக்காவது யோசிப்போம் இல்லையா... அது மாதிரி தான் நானும். ஒருவேளை 'காக்கா முட்டை' படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு நான் ரொம்பவே 'பீல்' பண்ணிருப்பேன். சினிமாவில் எனக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தந்த முடிவு என்றும் அதைச் சொல்லலாம்.

*வேறு என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கு...

பேய் படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கு. ஒரு பயங்கர பேயா மிரட்ட ஆசைதான். அதுக்கேத்த மாதிரி கதை வரணுமே...

* ஒருவேளை சினிமா இல்லையென்றால்...

கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆயிருப்பேன்னு நினைக்கிறேன். டிகிரி முடித்த பின்னர் எனக்கு 'பேஷன் டெக்னாலஜி' மீது ஒரு ஆர்வம் இருந்தது. எனவே ஒரு பேஷன் டிசைனராகவோ, ஒரு டான்ஸ் மாஸ்டராகவோ ஆகியிருப்பேன்னு நினைக்கிறேன்.

* காதல் பற்றி...

காதல் அமைகிறவர்களுக்கு நல்லது. மற்றபடி எனக்கு எதுவும் தெரியல. விட்டுடுங்க...

* எத்தனையோ விருதுகள் பெற்றிருந்தாலும் இன்னும் பெறவேண்டிய அடையாளமாக, உங்கள் இலக்காக எதைப் பார்க்கிறீர்கள்...

நல்ல கதைகளில் இன்னும் நிறைய நடிக்கணும். சாதாரணமாக இருந்த நான், இந்த லெவலுக்கு வந்ததே எனக்கு மிகவும் சந்தோஷம். இதை நான் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். என் மீது நிறைய நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கு. அதை காப்பாற்ற வேண்டும்.




* ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்து வரும் 'டஸ்கி பியூட்டி' பட்டம் பிடிச்சிருக்கா...

ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நல்லா நடிச்சாலே போதும், அழகு தானா வந்து முகத்துல ஒட்டிக்கொள்ளும். எனது படங்களில் நான் அவ்வளவா 'மேக்கப்' கூட போட்டுக்கிட்டது கிடையாது. இருந்தாலும் நடிப்பில் தான் நான் யாருன்னு காட்டி வருகிறேன்.

இவ்வாறு 'ஜில்'லிப்பாக பேசி முடித்தார், 'ஐஸ்'.


Next Story