''கிசுகிசுவெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது'' மனம் திறக்கிறார், சுனைனா
'காதலில் விழுந்தேன்' படம் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர், சுனைனா. முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அதனைத்தொடர்ந்து 'மாசிலாமணி', 'வம்சம்', 'நீர்ப்பறவை', 'வன்மம்', 'சில்லு கருப்பட்டி', 'லத்தி', 'ரெஜினா' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 'திரைப்பயணத்தில் 15 ஆண்டுகள் உற்சாகமாக கடந்து வந்திருக்கும் சுனைனா, தனது பிசியான நேரத்துக்கு இடையே 'தினத்தந்தி'க்கு மனம் திறந்த பேட்டி அளித்தார். அதன்
கலகலப்பான கதாபாத்திரத்தில் இருந்து 'ரெஜினா' படம் மூலமாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளீர்களே...
புதிய புதிய அவதாரங்கள் எடுப்பது நடிகர்-நடிகைகளின் வேலைதான். ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது.என்னை பொறுத்தவரையில் இந்த தளம் புதிது என்று நான் நினைக்கவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். நான் சினிமாவுக்கு வந்தபோது, எனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருந்திருக்கலாம். என்னை ஒரே தளத்தில் மட்டுமே பார்த்து ரசிக்க செய்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி அல்ல. நிறைய வித்தியாசமான சிந்தனைகளுடன் கதைகள் வருகிறது.
இதுவரை நீங்கள் நடித்த படத்திலேயே மறக்க முடியாத அனுபவம் என்றால் எதை சொல்வீர்கள்?
'ரெஜினா'வையே சொல்வேன். இந்த படத்தில் சில ஆக்ஷன் காட்சிகள், குறிப்பாக கார் சாகச காட்சிகளில் எனக்கு தெரியாமல் சில சம்பவங்களை டைரக்டர் அரங்கேற்றி விட்டார். இது எதிர்பாராத 'ஷாக்'காக இருந்தது. ஆனாலும் சாகச காட்சிகளில் இயல்பான லுக் இருந்தால் சரியாக இருக்கும் என்று எண்ணி டைரக்டர் இந்த பாணியை கையாண்டு இருக்கிறார். இது மிகப்பெரிய ஆச்சரியமாக எனக்கு அமைந்தது.
நீங்கள் பிறந்தது மராட்டியமாக இருந்தாலும், இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே...
உண்மை தான். எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். பிடித்த விஷயம் எதையும் உடனடியாக கற்றுக்கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படித்தான் தமிழையும் கற்றேன். வீட்டில் இந்தியில் தான் பேசிக்கொள்வோம். தற்போது தமிழில் நான் வெளுத்து வாங்குகிறேன். படத்தில் கூட நானே தான் 'டப்பிங்' பேசியிருக்கிறேன் என்றால் பாருங்களேன்...
எந்த கேள்வியாக இருந்தாலும் பட்டென பதில் சொல்கிறீர்களே, சட்டம் படித்திருக்கிறீர்களா?
(சிரித்தபடியே) நான் பி.காம். தான் படித்திருக்கிறேன். படித்தது எல்லாமே ஐதராபாத்தில் தான்.
முதல் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் அதே 'ஸ்லிம்' ஆக இருக்கிறீர்களே... ஏதாவது சிறப்பு 'டயட்' காரணமா... உங்கள் அழகின் ரகசியம் தான் என்ன?
உண்மையை சொன்னால் இந்த அழகு எனது பெற்றோர் எனக்கு தந்தது. அதுதான் உண்மை. எல்லாவற்றையும் விட உள்ளத்திலும், நிஜத்திலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அந்த உண்மையான மகிழ்ச்சி அழகை தேடித்தரும். அதுதான் யதார்த்தம். அப்படித்தான் நானும். எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பதால், அழகாக தெரியலாம்...
எந்த நடிகருடன் ஜோடியாக நடிக்க ஆசை?
எனக்கு கதை தான் முக் கியம். அதுதான் முதல் விஷயம். கதை மனதுக்கு பிடித்துவிட்டால் போதும், ஒரு நடிகையாக எனது பணியை செய்வேன். இவர், அவர் என்ற பேதம் இல்லை. ஆசையும் இல்லை. கதை நன்றாக இருக்கவேண்டும். அது மக்களுக்கு பிடிக்க வேண்டும். மனதுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.
சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயமாக எதை பார்க்கிறீர்கள்?
நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இந்த எண்ணம் என் சிறுவயது முதலே இருக்கிறது. இது ஏன்? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான நடிப்பை வழங்கவேண்டும் என்று தொடர்ந்து விரும்புகிறேன். இந்த எண்ணம் இப்போது தான் நிறைவேற தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரே மாதிரியாக நடிக்கவேண்டாமே... என்று அனைவருமே நினைக்கத்தான் செய்வார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எனவே இனி வித்தியாசமான படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் என்னை பார்க்கலாம்.
சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்...
அந்த எண்ணமே எனக்கு இல்லை. ஏனெனில் சிறுவயதிலேயே பரதம், நடனம் கற்க தொடங்கினேன். அப்போதே நான் நிச்சயம் சினிமாவுக்குள் நுழைவேன் என்று எனக்கு தெரியும். இன்னும் சொல்லப்போனால் சினிமாவுக்கு வந்தே தீருவேன் என்ற திமிருடன் இருந்தேன். இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன், ஒருவேளை சினிமாவுக்கு நான் வராமல் போயிருந்தால் 'செப்' ஆகியிருப்பேனோ, என்னவோ...
நீங்கள் நன்றாக சமைப்பீர்களா? வெளிநாட்டு சமையலா, இந்திய சமையலா? எது உங்கள் பேவரைட்?
ஹலோ... ஹலோ... இருங்கள். உடனே ரொம்ப பீல் பண்ணிட வேண்டாம். அடிப்படை சமையல் தெரியும். சமையலில் என்னென்ன மசாலாக்கள் எவ்வளவு அளவில் போடவேண்டும்? என்ற விவரங்கள் தெரியும். எல்லாவற்றையும் விட என்ன உணவாக இருந்தாலும், அதை சாப்பிடுவோர் ரசித்துப் பார்த்து ருசிக்கும் வகையில் டெக்கரேஷனில் கலக்கி விடுவேன். குறிப்பாக கொரோனா காலத்தில் என் தாயும், சகோதரரும் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அப்போது அவர்களை பராமரித்ததுடன், நானே 3 வேளையும் உணவு சமைத்தேன். அது எனக்கு ஒரு அனுபவம். குறிப்பாக நான் வைத்த 'பெப்பர் ரசம்' அடடா... ரகமாக வந்தது. ஆனாலும் இதற்கெல்லாம் காரணம் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அனுபவம் தான். அதோடு யூ-டியூப் வீடியோக்களும் கைகொடுத்ததை மறந்துவிட முடியாது. அந்தவகையில் சமையலில் நான் ஒரு கலக்கு கலக்கிவிடுவேன். இப்போது சொல்லுங்கள் நான் சொன்னது சரிதானே...
சரிதான்... உங்களது ரோல் மாடல் யார்?
அப்பா-அம்மா தான். யாரும் உதவிக்கு இல்லாத சூழலில், சொத்துகள் எதுவுமே இல்லாத சூழலில் தன் கையை ஊன்றி அப்பா எங்களை வளர்த்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், எங்களை நன்றாக வளர்த்தார். அவரது உழைப்பும், வைராக்கியமும் எனது ஊக்கமாகும். இன்றைக்கு இந்த நிலைக்கு நாங்கள் வந்திருக்கிறோம் என்றால் எனது அப்பா தான் காரணம். அதேபோல எனது தாய் தைரியமான பெண்மணி. எந்த ஒரு முடிவையும் துணிச்சலாக எடுக்கும் ஆற்றல் கொண்டவர். இவர்கள் இருவருமே எனது ரோல் மாடல். வாழ்க்கையை எப்படி வாழவேண்டும்? பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும்? என் பதை அவர்களைப் பார்த்து தான் நான் தெரிந்துகொள்கிறேன்.
படங்கள் தேர்வு குறித்து பெற்றோரிடம் ஆலோசிப்பீர்களா?
நிச்சயமாக கிடையாது. சிறுவயதில் இருந்தே என் விருப்பங்களுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது. 'உனக்கு பிடித்திருந்தால் எதையும் செய்' என்பார்கள். முடிவுகள் எடுக்கும் மனநிலையை எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். சிக்கலான சூழலை எப்படி எதிர்கொள்வது? என்றும் சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். எனது முடிவு எப்போதும் சரியானதாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை எனக்கும் இருப்பதால் முடிவுகளை நானே எடுக்கிறேன். நல்ல கலைஞர்களுக்கு இந்த எண்ணம் இருக்கும், இருக்கவேண்டும் என்றும் நம்புகிறேன்.
சமீபத்தில் பார்த்து ரசித்து வியந்த படம் எது?
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்'. இத்தனை பெரிய நட்சத்திர பட்டாளம் நிறைந்த படத்தை பார்த்து பிரமித்து போனேன். என்ன கதை, என்ன விறுவிறுப்பு, என்ன சண்டை, என்ன ஒரு கிளைமேக்ஸ். அப்பப்பா...
வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா...
கதையும், கதாபாத்திரமும் எனக்கு மிகவும் முக்கியம். எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? என்று யோசிப்பேன். மற்றபடி இதுதான் சரி என்று மனதில் பட்டால் நிச்சயம் நடிப்பேன். இதுவரை அப்படிப்பட்ட வாய்ப்பு வரவில்லை. நான் நடிக்கவும் இல்லை. இனி வந்தாலும், அதில் நான் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புதிய படங்களில் 'கமிட்' ஆகியிருக்கிறீர்களா?
நான் நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படங்களில் நடிக்கவுள்ளேன்.
எப்போது டும்... டும்... டும்...
நல்ல நேரத்தில் நடக்கும். (சிரிக்கிறார்). நம்மை புரிந்துகொண்டு நடக்கும் நல்ல நபர் கிடைக்கவேண்டும். அவர் எப்போது வருவார்? என்ன நடக்கும்? என்பதெல்லாம் முன்கூட்டியே தலைவிதியாக எழுதப்பட்டிருக்கும். எனவே நடக்கும்போது அவை நடக்கும். காலம் அதையெல்லாம் பார்த்துக் கொள்ளும்.
இப்படியாக சிரித்தபடியே பேட்டியை முடித்தார், சுனைனா. விவரம் வருமாறு:-