வி 3 : சினிமா விமர்சனம்


வி 3 : சினிமா விமர்சனம்
x
நடிகை: வரலட்சுமி சரத்குமார்  டைரக்ஷன்: அமுதவாணன் இசை: ஆலன்செபாஸ்டியன் ஒளிப்பதிவு : சிவாபிரபு

ஆடுகளம் நரேனுக்கு பாவனா, எஸ்தர் அனில் ஆகிய இரண்டு மகள்கள். வெளியூருக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பாவனாவை 5 பேர் ஓடும் லாரியில் தூக்கி போட்டு பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். அவர் எரித்துக்கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல் வருகிறது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதாக 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து சுட்டுக்கொல்கின்றனர். கொலையுண்ட இளைஞர்கள் அப்பாவிகள் என்று அவர்களின் குடும்பத்தினர் போராடுகின்றனர். இதனை விசாரிக்க மனித உரிமை கமிஷன் களத்தில் இறங்குகிறது. விசாரணை அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. அது என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி உள்ளனர்.

மனித உரிமை கமிஷன் அதிகாரியாக மிடுக்குடன் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். அவரது விசாரணை பாணியும், இயல்பை மீறாத நடிப்பும் கதாபாத்திரத்தின் தரத்தை உயர்வாக்கி காட்டுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக கலங்கும் கிளைமாக்ஸ் காட்சியில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் அதிக காட்சிகளில் அவரை பயன்படுத்தி இருக்கலாம்.

பாவனா கதாபாத்திரம் பெரிய பலம். காமுகர்களிடம் இருந்து அவர் தப்பி ஓடுவது திக் திக் ரகம். இறுதியில் அவர்கள் பிடியில் சிக்கி தவிப்பதும், உயிர் பிழைக்க கிழிந்த துணியோடு கதறுவதும் பதற வைக்கிறது. கொடுமை செய்தவர்களை அண்ணன்கள் என்று பேசி அறிவுரை சொல்லும் இடத்தில் கலங்க வைக்கிறார்.

ஆடுகளம் நரேன் பாசமான தந்தையாக வாழ்ந்து இருக்கிறார். இரண்டாவது மகளாக வரும் எஸ்தர் அனில், காவல்துறை அதிகாரியாக வரும் பொன்முடி, லோகு, சந்திரகுமார் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பின்னர் வேகம் எடுக்கிறது. பாலியல் வன்கொடுமை, போலி என்கவுண்டர், அரசியல்வாதிகளின் அடாவடி என்று பல சமூக அவலங்களை கையில் எடுத்து அழுத்தமாக கதை சொல்லி உள்ளார் இயக்குனர் அமுதவாணன். கிளைமாக்சில் பாலியல் கொடுமைகளை தடுக்க அவர் சொல்ல வரும் தீர்வு சிந்திக்க வைக்கிறது.

சிவாபிரபுவின் கேமரா இரவில் நடக்கும் பயங்கரத்தை திகிலாக படமாக்கி உள்ளது. ஆலன்செபாஸ்டியன் இசையில் பாடல்கள் கதைக்குள் இழுக்கின்றன. பின்னணி இசையும் அம்சம்.


Next Story