உன்னால் என்னால் : சினிமா விமர்சனம்
பிழைப்பு தேடி ஜெகா, ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். இவர்களில் ஒருவரின் தந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. இன்னொருவர் வீட்டில் கடனை திருப்பி கொடுக்க முடியாத பிரச்சினை, மற்றவருக்கு பணத்துடன் சென்றால்தான் காதலியை மணக்க முடியும் என்ற நிர்ப்பந்தம்.
இவர்கள் மூவரும் ஒரு புள்ளியில் இணைந்து ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலை பார்க்கின்றனர். அதில் கமிஷன் தராமல் ஏமாற்றப்பட்டு விரக்தியோடு நிற்கிறார்கள்.
விபத்தில் சிக்கிய ராஜேஷை காப்பாற்றுகின்றனர். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெண் தாதா சோனியா அகர்வால் மூவரையும் அழைத்து ராஜேஷை கொலை செய்தால் தேவையான பணத்தை தருவதாக ஆசைக்காட்டுகிறார்.
ராஜேஷ் பின்புலம் என்ன? பணத்துக்காக அவரை கொன்றார்களா? என்பது மீதி கதை…
ஜெகா, உமேஷ் இருவரும் கதாபாத்திரங்களில் ஒன்றி உள்ளனர். தந்தை சிகிச்சைக்கு பணம் கிடைக்காமல் அல்லாடுவது, காதலியின் தந்தையிடம் பணம் சம்பாதித்து வந்தால் உங்கள் மகளை கட்டி கொடுங்கள் என்று சவால் விட்டு அதை நிறைவேற்ற முடியாமல் தவிப்பது என்று நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர் டெல்லி கணேஷ், ராஜேஷ் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கி உள்ளனர். சோனியா அகர்வால் சிறிது நேரம் வந்தாலும் வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளார். சோடா கோபால் கதாபாத்திரத்தில் வரும் ரவிமரியா வழக்கமான காமெடி வில்லனாக கலகலக்க வைக்கிறார்.
சஹானா, நிஹாரிகா, லூப்னா அமீர், ஆர். சுந்தரராஜன், மோனிகா, நெல்லை சிவா ஆகியோரும் உள்ளனர்.
பிளாஷ்பேக் காட்சிகள் திரும்ப திரும்ப வருவது எரிச்சலை தருகிறது.
கிச்சாஸ் ஒளிப்பதிவு ஆறுதல், ரிஸ்வான் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
நட்பு, காதல், ரியல் எஸ்டேட் மோசடிகளை காட்சிப்படுத்த டைரக்டர் ஜெயகிருஷ்ணா முயற்சித்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.