சஞ்ஜீவன்: சினிமா விமர்சனம்
ஸ்னூக்கர் விளையாட்டும், நண்பர்கள் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்களும் கதை.
வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசின் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய தோழர்கள். வினோத் ஸ்னூக்கர் விளையாடுவதில் கில்லாடி. குடி கும்மாளம் என்று இருக்கும் நண்பர்கள் மத்தியில் ஒழுக்கமானவராக இருக்கிறார். ஸ்னூக்கர் போட்டியிலும் வென்று பதக்கம் பெறுகிறார். அவரை நாயகி திவ்யாவுக்கு பிடித்துப்போகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். ஸ்னூக்கர் போட்டியில் வென்றதை கொண்டாட நண்பர்கள் காரில் ஏற்காடு பயணிக்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பது நெஞ்சை உறைய வைக்கும் மீதி கதை. நண்பர்களின் கேலி, குடி, கும்மாளம், காதல் என்று காட்சிகள் கலகலப்பாக நகர்கிறது.
சாதாரண ஸ்னூக்கர் போட்டியில் வினோத் லோகிதாஸ் கலந்து கொண்டு தோற்பது, பின்னர் கடும் பயிற்சிகள் எடுத்து நிஜ போட்டியில் ஜெயிப்பது, திவ்யாவை காதலிப்பது கோபத்தில் எகிறும் நண்பர்களை அமைதிப்படுத்துவது என்று முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். சத்யா, ஷிவ் நிஷாந்த், யாசின் மூவரும் நட்பு வட்டத்தை கலகலப்பாக வைத்துள்ளனர். திவ்யா விழிகளால் பேசும் அழகான காதலி. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி கதையை விறுவிறுப்பு, திருப்பங்களுடன் நகர்த்தி கவனம் பெறுகிறார் டைரக்டர் மணி சேகர். ஸ்னூக்கர் போட்டியையும், கார் சேசிங் காட்சியையும் கார்த்திக் ஸ்வர்ணகுமார் கேமரா விறுவிறுப்பாக்கி உள்ளது. தனுஷ் மேனன் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.