மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி - சினிமா விமர்சனம்
அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ள படம்.
நட்சத்திர ஓட்டல் தலைமை சமையல் கலைஞரான அனுஷ்கா காதல் திருமணம் செய்த தனது அம்மாவும், அப்பாவும் பிரிந்ததால் காதல், கல்யாண பந்தங்களை வெறுக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் தாயாகி குழந்தையோடு வாழ நினைக்கிறார்.
இதற்காக கருத்தரிப்பு மையத்தில் ஆலோசனை பெறுகிறார். இதற்கு உதவும் இளைஞனை தானே அழைத்து வருவதாகவும் சொல்கிறார். நவீன் தகுதியானவர் என்று நினைத்து நெருங்கி பழகி குடும்ப விவரங்களை சேகரிக்கிறார். அனுஷ்காவை காதலிக்க தொடங்கும் நவீன் அவரது நோக்கம் தெரிந்ததும் அதிர்கிறார்.
அனுஷ்காவுக்கு நவீன் உதவினாரா? அனுஷ்காவை மணக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறியதா? என்பதற்கு விடையாக மீதி கதை..
அனுஷ்கா மொத்த கதையையும் சுமக்கும் பொறுப்போடு பலவிதமான உணர்வுகளை கொடுப்பதில் சளைக்காமல் சாதித்துள்ளார். கொடையாளியிடம் உதவி கேட்க தயங்குவது, அவரை பிடித்து இருந்தும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தவிப்பது என பல இடங்களில் நடிப்பின் உச்சம் தொடுகிறார்.
அப்பாவுக்கு பயந்தவராக சராசரி இளைஞன் வேடத்தில் வரும் நவீன், இளமையும் இனிமையும் கலந்த கேரக்டரை பிரித்து மேய்ந்துள்ளார். நண்பர்களிடம் பரவசம், காதலியிடம் அவசரம் என தன்னுடைய கேரக்டருக்கு பல மடங்கு நியாயம் செய்துள்ளார்.
அம்மாவாக வரும் துளசி, அப்பாவாக வரும் முரளி ராம் கதாபாத்திரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள். நாசர், ஜெயசுதா சில காட்சிகளில் வந்தாலும் நிறைவு
நாயகனின் நண்பனாக வரும் அபிநவ், நாயகியின் தோழியாக வரும் சோனியா தீப்தி ஆகியோரும் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள். ராடன் இசையில் பாடல்கள் இனிமை. கோபி சுந்தர் திரைக்கதைக்கு பொருத்தமான பின்னணி இசையைக் கொடுத்து கவனிக்க வைக்கிறார்.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் வண்ணமயமான காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் யூகிக்கும்படியான காட்சிகள் வருவது பலகீனம்.
மேலை நாடுகளில் ஆண் துணை இல்லாமல் சட்டரீதியாக தாய்மையடைவது சகஜம் என்ற கருத்து நமக்கு அந்நியமாக இருந்தாலும் அது எந்தவிதத்திலும் கதையை பாதிக்காதளவு காதல், எமோஷ்னல் கலந்து ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் மகேஷ்பாபு பச்சிகொலா.