மாவீரன்: சினிமா விமர்சனம்
கூவம் நதிக்கரையோரம் வசிக்கிறது சிவகார்த்திகேயனின் குடும்பம். கார்ட்டூன் படங்கள் வரைந்து தன்னுடைய அம்மாவையும், தங்கையையும் காப்பாற்றுகிறார். ஒரு நாள் அங்கு வசிப்பவர்களை அதிகாரிகள் காலி செய்ய வைத்து தரமன்றி கட்டிய குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் குடியமர்த்துகிறார்கள்.
விரிசலும், இடிபாடுமாய் இருக்கும் அந்த குடியிருப்பை கட்டியது அமைச்சரின் குடும்பம் என்று தெரிந்ததும் சிவகார்த்திகேயன் ஒதுங்கி அடாவடி ஆட்களிடம் அனுசரித்துப் போகிறார்.
ஆனால் ஒரு விபத்தில் சிக்கிய பிறகு சிவகார்த்திகேயனுக்கு அசரீரி குரல் கேட்க ஆரம்பிக்கிறது. அதுவரை சாதுவாக இருந்த அவர் அசரீரி குரலுக்கு கட்டுப்பட்டு மாவீரனாக மாறுகிறார்.
சிவகார்த்திகேயனால் யானை பலம் கொண்ட அமைச்சரை எதிர்த்து வெல்ல முடிந்ததா, மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற முடிந்ததா? என்பது மீதி கதை.
சிவகார்த்திகேயன் அப்பாவியான சத்யாவாகவும், அதிரடியான மாவீரனாகவும் அசத்தி உள்ளார். உடை, உடல் மொழியால் அடித்தட்டு குடும்பத்து இளைஞனின் சுபாவத்தை கண்முன் நிறுத்துகிறார். கார்ட்டூன் கதாபாத்திரம் மூலம் மக்களின் ஏற்றத்தாழ்வுகளை நெருப்பாக சுட்டிக்காட்டுகிறார். தன்னுடைய வேடம் சிரீயஸாக இருந்தாலும் தனக்கே உரித்தான நகைச்சுவையையும் ஆங்காங்கே வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தியேட்டரையும் சிரிக்க வைக்கிறார்.
அதிதி ஷங்கர் தன்னுடைய கேரக்டருக்கு சிறப்பு செய்துள்ளார். அமைச்சராக வரும் மிஷ்கின் வில்லன் வேடத்தில் வேங்கையின் பாய்ச்சல் காட்டி மிரட்டி உள்ளார்.
உருவம் காட்டாமல் குரல் மட்டும் கொடுக்கும் விஜய்சேதுபதியின் பங்களிப்பு கவனம் ஈர்க்கின்றது.
சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் சரிதா காலங்கள் கடந்தாலும் இம்மியளவும் சரியாத அதே நடிப்பால் வியக்க வைக்கிறார். யோகிபாபுவின் கதையோடு கலந்த காமெடி ரசிக்க வைக்கிறது.
அமைச்சரின் உதவியாளராக வரும் சுனில் கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். சிவகார்த்திகேயனின் தங்கையாக வரும் மோனிகா பிளெஸ்ஸி நிறைவு.
பிற்பகுதி கதையில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கலகலப்பான திரைக்கதை அதை மறக்கடிக்க செய்கிறது.
கதை நடக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கேமரா வித்தை காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.
பரத் சங்கர் இசையில் வண்ணாரப்பேட்டையில் பாடல் துள்ளல் ரகம். பின்னணி இசையாலும் கதைக்கு வலு சேர்த்துள்ளார்.
விளிம்புநிலை மக்களின் அறியாமையை அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் தங்களுக்கு சாதகமாக்கி ஊழல் செய்கிறார்கள் என்பதை அழுத்தமான காட்சிகளோடு நக்கல், நையாண்டி கலந்து சமூக பொறுப்புடன் இயக்கியுள்ளார் மடோன் அஸ்வின். கடைசி காட்சியில் சிவகார்த்திகேயன் கேட்கும் 'நீ வந்து தங்கு' என்ற கேள்வி அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி.
சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு வெற்றி மகுடம்.