கெத்துல: சினிமா விமர்சனம்
திருநங்கைகள் வாழ்வியலை மையமாக கொண்ட கதை ‘கெத்துல’ .
மந்திரி சாயாஜி ஷிண்டேவின் தம்பி சலீம் பாண்டா பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அண்ணன் செல்வாக்கை வைத்து போலீசில் சிக்காமலும் தப்புகிறார்.
மதுபான கூடம் ஒன்றில் நடனம் ஆடும் ரீரினையும் பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தும்போது ஸ்ரீஜித் குறுக்கிட்டு காப்பாற்றுகிறார். இதனால் ஸ்ரீஜித்தை பழிவாங்க சலீம் பாண்டா துடிக்கிறார். மந்திரி பதவிக்கு சிக்கல் வரும் என்று சாயாஜி ஷிண்டே தடுக்கிறார். தன்னை காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரீரினுக்கு காதல் வருகிறது. ஆனால் காதலை ஏற்க ஸ்ரீஜித் மறுக்கிறார். ரீரின் அதை பொருட்படுத்தாமல் ஸ்ரீஜித் வீட்டுக்கு சென்று தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டு அங்கேயே வசிக்கிறார். படுக்கையிலும் நெருங்குகிறார்.
அப்போது ஸ்ரீஜித் யார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. அதன் பிறகு நடக்கும் திருப்பங்கள் மீதி கதை. நாயகனாக வரும் ஸ்ரீஜித்துக்கு மாறுபட்ட இரு தோற்றங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்துள்ளார்.
தனக்கு நெருக்கமாக இருந்தவர்களை இழந்து கதறும் போது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதிரடி சண்டைகளிலும் வேகம் காட்டி உள்ளார். ஆரம்பத்தில் அரைகுறை உடையில் வரும் ரீரினுக்கு பிற்பகுதி கதையில் நடிக்க நிறைய வாய்ப்பு. காதலன் நிலைமையை பார்த்து கலங்குவது ஒருபுறம் வில்லனிடம் இருந்து தப்பிக்க போராடுவது மறுபுறம் என்று நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சலீம் பாண்டா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். மந்திரியாக வரும் சாயாஜி ஷிண்டே அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார். திருநங்கைகளாக வருபவர்கள் கதைக்கு வலுசேர்த்துள்ளனர். போலீஸ் கமிஷனராக ரவிகாலே சிறிது நேரம் வருகிறார்.
திரைக்கதையில் கூடுதலாக சுவாரஸ்யங்களை சேர்த்து இருந்தால் இன்னும் கவனம் பெற்று இருக்கும். திருநங்கைகள் வாழ்வியலை மையமாக வைத்து இயக்குனர் வி.ஆர்.ஆர், திருப்பங்களுடன் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி உள்ளார். ஷீவா வர்ஷினியின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. கே.ஷஷிதர் ஒளிப்பதிவும் நிறைவு.