காடப்புறா கலைக்குழு: சினிமா விமர்சனம்
கிராமிய இசையில் ஆர்வமிக்க முனீஸ்காந்த் கலைக்குழு நடத்தி வருகிறார். கலை மீது உள்ள ஆர்வத்தால் கல்யாணம் பற்றிய யோசனையே இல்லாமல் காலம் கடந்து விடுகிறது.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ளூர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பதவியில் இருக்கும் ஊர் தலைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் நேர்மையான இளம் தலைவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்கிறார் முனீஸ்காந்த். அதனால் ஊர் தலைவரின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார். உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
முடிவில் முனீஸ்காந்த்தின் திருமணம் நடந்ததா, கொலை முயற்சியிலிருந்து தப்பித்தாரா என்பது மீதி கதை.
முனீஸ்காந்த்துக்கு படம் முழுவதும் வரக்கூடிய நாயகன் வேடம். படத்தின் மொத்தப் பாரத்தையும் அவர் தோள் மீதுதான் இறக்கி வைத்துள்ளார்கள். அதை அவரும் இயல்பான நடிப்பால் மிக சாதாரணமாக கடந்து போவது அருமை.
குழந்தைகளுடன் விளையாடுவது, ஆதரவற்றவர்களை தாயுள்ளத்தோடு அரவணைப்பது என படம் முழுவதும் சினிமாத்தனம் இல்லாமல் வாழ்ந்துள்ளார். சீரியசான இடங்களையும் தன்னுடைய சிரிப்பால் நகர்த்திச் செல்வது சிறப்பு.
நண்பராக வரும் காளிவெங்கட் முகத்திலும் யதார்த்தம் விளையாடுகிறது. மகளின் மருத்துவ தேவைக்காக மனதுருகும் இடம் நெகிழ்ச்சி.
திண்ணையில் உட்கார்ந்து காலத்தைக் கழிக்கும் ஸ்ரீலேகா ராஜேந்திரன், வில்லனாக வரும் மைம் கோபி, பாடகராக வரும் சூப்பர்குட் சுப்பிரமணி, ஹரிகிருஷ்ணன், ஸ்வாதிமுத்து, ஆத்தங்குடி இளையராஜா என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளார்கள்.
கிராமத்தின் அழகையும், வெள்ளந்தியான மனிதர்களையும் மிக அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி. பாடல்கள் அனைத்தும் கதையுடன் பயணிக்கும்படி இசையமைத்துள்ளார் ஹென்றி, பின்னணி இசையிலும் நிறைவு
மேற்கத்திய இசை வரவால் நாட்டுப்புற கலைகள் அழியும் நிலையிலும் அதையே நம்பி வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் கவலைக்குரியதாக மாறியுள்ளதை வாழ்வியல் சார்ந்த கதையாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ராஜா குருசாமி.
கலை, பண்பாட்டின் உயர்வையும், தொன்மையையும் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.