நான் லீனியர் - "இரவின் நிழல்" சினிமா விமர்சனம்


நான் லீனியர் - இரவின் நிழல் சினிமா விமர்சனம்
x
நடிகர்: பார்த்திபன் நடிகை: வரலட்சுமி  டைரக்ஷன்: பார்த்திபன் இசை: ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு : ஆர்தர் வில்சன்

ஒரு மனிதன் தன் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்க, அவன் கண்முன் அவன் மொத்த வாழ்க்கையும் ரீவைண்டாக அதுவும் முன்னுக்குப் பின் மாறி மாறி நான் லீனியரில் வந்தால் எப்படியிருக்கும் என யோசித்து ஒரு கதையை எழுதியிருக்கிறார் பார்த்திபன்.

பார்த்திபன்ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட பார்த்திபன் படம்.

'மெயின்' படம் தொடங்குவதற்கு முன்பு இந்த படத்தை எடுத்தது எப்படி? என்ற 'மேக்கிங்' படம் 30 நிமிடங்கள் ஓடுகிறது. படத்தின் டைட்டிலிலேயே பார்த்திபன் தனது முத்திரையை பதிவு செய்து இருக்கிறார். 'மேக்கிங்' படத்தில் அவருடைய கடும் உழைப்பும், படக்குழுவினரின் ஒத்துழைப்பும் தெரிகிறது. கதையும், 'நந்து' என்ற அவரது கதாபாத்திரமும் துணிச்சலான முயற்சி. ஒரு மனிதனின் பிறப்பும், வளர்ப்பும் சரியாக இருந்தால் ஒழுக்கமான வாழ்க்கை அமையும். இல்லையென்றால், 'நந்து'வுக்கு நிகழும் வேதனைகள் மிகுந்த சோதனையான வாழ்க்கையே அமையும் என்பதே கதையின் கரு.

நந்து, ஒரு விலைமாதுவின் மகன். நிர்வாணமாக கிடக்கும் தாயின் மார்பில் பால் குடித்தவன். சிறுவனான பின், ஒரு போலீஸ்காரரால் வன்புணர்வு செய்யப்பட்டவன். கஞ்சா தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறான். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பணக்காரனாகி விடுகிறான்.

அதன்பிறகு அவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், மீதி கதை.

எந்த கதாநாயகனும் நடிக்க தயங்கும் கரடுமுரடான (நந்து) கதாபாத்திரத்தில் பார்த்திபன் பன்முகம் காட்டியிருக்கிறார். அவருடைய நடிப்பும், வசன உச்சரிப்பும் அவருக்குள் இருக்கும் நல்ல நடிகரை அடையாளம் காட்டுகின்றன.

கதைநாயகியாக 'பிரேமகுமாரி'யாக வரலட்சுமி சரத்குமார், போலி சாமியாராக ரோபோ சங்கர், 18 வயது நந்துவாக சந்துரு, 30 வயது நந்துவாக ஆனந்த கிருஷ்ணன் மற்றும் புதுமுகங்கள் சினேகா குமார், சாய் பிரியங்கா ரூத் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் கதையுடன் ஒன்றி இசையமைத்து இருக்கிறார். ''பாவம் செய்யாதே மனமே'' பாடல் ஒன்றே போதும். ஆஸ்கர் நாயகனின் திறமைக்கு ஒரு துளி. பின்னணி இசை மனதை வசீகரிக்கிறது. ஆர்தர் வில்சன் கேமரா, காட்சிகளை கவித்துவமாக பதிவு செய்து இருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பார்த்திபன். இதுபோன்ற படங்களை கொடுக்க இன்னொரு பார்த்திபன் வரவேண்டும் என்று சொன்னால், அது மிகையல்ல. படத்தில் இடம்பெற்றுள்ள கெட்ட வார்த்தைகளுடன் கூடிய வசனங்களும், பின்பக்கத்தை திறந்து காட்ட சொல்லி அடிப்பதும், வக்கிரம். படத்துக்கு திருஷ்டி பரிகாரம் என்று எடுத்துக்கொண்டால், 'இரவின் நிழல்', உலக சாதனைதான்.


Next Story