இந்த கிரைம் தப்பில்ல - சினிமா விமர்சனம்


இந்த கிரைம் தப்பில்ல - சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஆடுகளம் நரேன் நடிகை: மேக்னா எலன்  டைரக்ஷன்: தேவகுமார் இசை: பரிமளவாசன் ஒளிப்பதிவு : கார்த்திகேயன்

கிராமத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் நாயகி மேக்னா எலனுக்கு ஒரு செல்போன் கடையில் வேலை கிடைக்கிறது.

அப்போது நண்பர்களான மூன்று இளைஞர்கள் மேக்னாவை காதலிப்பதாக சொல்கிறார்கள்.

மேக்னாவும் ஒருவர் காதல் ஒருவருக்கு தெரியாதபடி எல்லோரையும் காதலிப்பதாக சொல்கிறார்.

இதற்கிடையே ஆடுகளம் நரேன் அப்பாவி இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் காம கொடூரன்களை இளைஞர் படையை உருவாக்கி தண்டிக்க நினைக்கிறார்.

மேக்னா எலன் மூன்று இளைஞர்களை காதலிப்பதாக ஏன் சொல்கிறார்? ஆடுகளம் நரேன் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தாமல் ஏன் ரகசியமாக பழிவாங்குகிறார்? அதன் பின்னணி என்ன? என்பது மீதி கதை.

மேக்னாவுக்கு அப்பாவியாக இருந்து அதிரடியாக மாறும் கேரக்டர். அதை அவர் தடுமாறாமல் செய்திருப்பது சிறப்பு. கவர்ச்சியில் மிகவும் தாராளம் காண்பித்து உள்ளார்.

ஆடுகளம் நரேன் நிறுத்தி நிதானமாக தன் ஆட்டத்தை ஆடியிருக்கிறார். திருப்புமுனை தரவேண்டிய அவருடைய கதாபாத்திரம் அதை செய்யாதது ஏமாற்றமே.

கொடூர செயலை செய்பவர்களை தேடிப்பிடித்து பழிவாங்கும் கேரக்டரில் பாண்டி கமல் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

முத்துக்காளை, வெங்கல்ராவ், கிரேசி கோபால் கூட்டணி ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு படுகிறார்கள்.

மனோஜ் கிருஷ்ணசாமி, காயத்ரி ஆகியோரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

பரிமளவாசன் இசையமைத்துள்ளார்.

எளிமையான மனிதர்கள், சாதாரணமான இடங்கள் என ஒளிப்பதிவுக்கான வசதி குறைவாக இருந்தாலும் ரசிக்கும்படி படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திகேயன்.

சமூகத்தில் எப்போதெல்லாம் அநீதி நடக்கிறதோ அப்போதெல்லாம் அடங்கிப் போகாமல் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் தேவகுமார்.

படத்தின் கருத்து பலமாக இருக்கிறது. அதை சொல்லிய விதத்திலும் இன்னும் பலம் சேர்த்து இருக்கலாம்.


Next Story