இன்பினிட்டி: சினிமா விமர்சனம்
ஒரு மாநகரத்தில் நடக்கும் கதை. இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அதை காவல் துறை துப்பு துலக்குவதற்கு முன் அடுத்தடுத்து சில முக்கிய பிரமுகர்களும் கொலை செய்யப்படுகின்றனர். இதனை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரியான நட்ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அவரும் கொலையாளியை பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார். இன்னொரு புறம் அரசு டாக்டரான வித்யா பிரதீப் சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் அவரையும் கண்காணிக்க ஆரம்பிக்கிறார் நட்ராஜ்.
இறுதியில் கொலையாளியை நட்ராஜ் எப்படி நெருங்குகிறார், வித்யா பிரதீப்பை சுற்றி நடக்கும் மர்மம் என்ன என்பது மீதி கதை.
சி.பி.ஐ. அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் நட்ராஜ். குற்றவாளிகளை விசாரிக்கும் தோரணை, வழக்கை முடிப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என அனைத்தும் கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறது. மொத்தத்தில் வழக்கமான நட்ராஜாக இல்லாமல் கதாபாத்திரம் அறிந்து அபாரமாக நடித்துள்ளார்.
டாக்டராக வரும் வித்யா பிரதீப் அழகாலும், அளவான நடிப்பாலும் மனதைத் தொடுகிறார். அவருடைய இன்னொரு முகம் பகீர் ரகம். கிளைமாக்ஸ் காட்சியில் சண்டையும் போட தெரியும் என அதிலும் ஒரு கை பார்ப்பது சிறப்பு.
காவலராக வரும் முனீஸ்காந்த் சிரிக்க வைக்கிறார். நட்ராஜின் நண்பராக வரும் முருகானந்தம், இளம்பெண்ணின் அப்பாவாக வரும் ஜீவா ரவி, அம்மாவாக வரும் மோனா பேடர், நிகிதா, ஆதவன், சிந்துஜா என அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள்.
பாலசுப்பிரமணியன் இசையில் இரண்டு பாடல்களும் கதையை நகர்த்த உதவுகிறது. பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார்.
சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு படத்தின் தரத்தை முடிந்தளவுக்கு கூட்டியுள்ளது.
சி.பி.ஐ. விசாரணைகள், கூடவே பயணிக்கும் குற்றவாளிகளின் கதை என திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய் கார்த்திக். குற்றங்கள் குறைவது தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் இருக்கிறது என்ற மெசேஜ் காது கொடுத்து கேட்க வேண்டிய ஒன்று.
இடைவேளைக்கு பிறகு கதை சூடு பிடிக்க ஆரம்பித்தாலும் பிளாஷ்பேக் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும்.