சினிமா விமர்சனம் : வசந்த முல்லை
ஹாலிவுட் பட கதையில் வருவதை போல டைம் லூப்பில் மாட்டிக்கொண்டு திரும்ப திரும்ப ஒரே நிகழ்வுகளை முதன்மைக் கதாபாத்திர கட்சியின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா.
சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றும் பாபி சிம்ஹா. ஓய்வு, உறக்கம் இல்லாமல் வேலையே கதி என இருப்பதால் மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார். கணவனின் உடல் நலம் கருதி, வற்புறுத்தி மலை பிரதேசத்துக்கு பிக்னிக் அழைத்து செல்கிறார் அவருடைய மனைவி காஷ்மீரா பரதேசி.
போகும் வழியில் இரவு ஒரு ஓட்டலில் தங்குகிறார்கள். அப்போது காஷ்மீரா பரதேசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட மருந்து வாங்க வெளியே செல்கிறார் பாபி சிம்ஹா. திரும்பி வரும்போது மர்ம மனிதன் மூலம் இருவருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ஆபத்திலிருந்து கணவன், மனைவி தப்பித்தார்களா, மர்மமனிதன் யார் என்பது மீதி கதை.
பாபி சிம்ஹா வழக்கமான தன் பாணியில் இருந்து வேறுபட்டு வித்தியாசமான நடிப்பை கொடுக்க பெரும் முயற்சி எடுத்து இருக்கிறார். அது நன்றாகவே கை கொடுத்துள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற இயக்குனரின் கற்பனைக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கிறார். மனைவிக்காக உருகும் காட்சியில் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தையும் தொட்டு இருக்கிறார். பாபி சிம்ஹா மனைவியாக வரும் காஷ்மீரா பரதேசி ஜாடிக்கேற்ற மூடி போல கச்சிதமாக இருக்கிறார். சென்டிமென்ட் காட்சியில் கலங்க வைக்கும் அதே வேளையில் கிளாமரிலும் கலக்கி இருக்கிறார். ஓட்டல் வரவேற்பாளராக வரும் கொச்சு பிரேமன், டாக்டராக வரும் சரத்பாபு ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆர்யா சில காட்சிகளே வந்தாலும் மொத்த படத்தையும் தாங்கிப் பிடிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார்.
ராஜேஷ் முருகேசன் பின்னணி இசை தியேட்டரை அதிர செய்கிறது. ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் கதையின் தன்மை கெடாத அளவுக்கு மிக நேர்த்தியாக படமாக்கி உள்ளார்.மனசிதைவு விஷயத்தை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் சொல்லி இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.இன்றைய இளைய சமுதாயம் வேலை, பணம் என லைப் ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் எப்படி தவறி விடுகிறார்கள் என்பதை திகில் பின்னணியில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமணன் புருஷோத்தமா.