சினிமா விமர்சனம்: டைரி


சினிமா விமர்சனம்: டைரி
x
நடிகர்: அருள்நிதி நடிகை: பவித்ரா மாரிமுத்து  டைரக்ஷன்: இன்னாசி பாண்டியன் இசை: ரான் ஈதன் யோஹன் ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்

நடிகர் அருள்நிதியின் திரில்லர் படங்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ளது டைரி.

ஒரு கணவரும், மனைவியும் (கிஷோர்-செந்தி) கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு செல்வது போல் படம் ஆரம்பிக்கிறது. அது இரவு நேர பயணம். "13-வது வளைவில் ஒரு பெண் குழந்தையுடன் நிற்குமாம்" என்று மனைவியிடம் கணவர் விளையாட்டாக பயமுறுத்துகிறார். அந்த வளைவை கார் அடையும்போது, விபத்துக்குள்ளாகிறது. கணவரும், மனைவியும் அதே இடத்தில் பலியாகிறார்கள்.

அருள்நிதி,இந்த விபத்தையும், 16 வருடங்களுக்கு முன் ஊட்டியில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ஒரு பஸ் காணாமல் போனதையும், அதில் இருந்த பயணிகள் மாயமான சம்பவத்தையும் இணைத்து கதை சொல்லி இருக்கிறார்கள்.

இதேபோல் 16 வருடங்களுக்கு பிறகு ஒரு சம்பவம் நடக்கிறது. ஊட்டியில் இருந்து கோவைக்கு இரவு நேர கடைசி பஸ் புறப்பட்டு செல்கிறது. கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்கும் பணியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அருள்நிதி, 3 கொலைகாரர்கள், ஒரு தாய்-மகன், ஒரு பாட்டி, ஒரு இளம்பெண், வீட்டை விட்டு ஓடி வந்த ஒரு காதல் ஜோடி, மலைவாசி குடும்பத்தினர் உள்பட பலர் அந்த பஸ்சில் பயணிக்கிறார்கள்.

அவர்களுக்குள் நிகழும் சம்பவங்களும், உச்சக்கட்ட விபத்தும்தான் மொத்த படமும்.

அருள்நிதிக்கும், போலீஸ் வேடத்துக்கும் நெருக்கமான சினேகிதம் இருக்கும் போல... இந்த படத்திலும் அவர் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். காக்கி சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாக படம் முழுவதும் கலக்குகிறார். கதாநாயகி இருந்தும் காதல் காட்சிகள் இல்லை. சண்டை காட்சிகளில் வழக்கம்போல் பின்னுகிறார்.

கதாநாயகி பவித்ராவுக்கு அதிக வேலை இல்லை. ஜெயப்பிரகாஷ் வில்லனாக வருகிறார். சாம்ஸ், ஷாரா ஆகிய இருவரும் கலகலப்பூட்டுகிறார்கள்.

இன்னாசி பாண்டியன் டைரக்டு செய்து இருக்கிறார். திகில், அமானுஷ்யம் இரண்டையும் கலந்து விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். படத்தில் தேவையில்லாத காட்சிகள் நிறைய... உச்சக்கட்ட காட்சியில் இன்னும் பதற்றத்தை கூட்டியிருக்கலாம்.

அருள்நிதி படம் என்றாலே திகிலான கதையோட்டம் இருக்கும் என்ற கண்ணோட்டத்துடன் தியேட்டருக்குள் வரும் ரசிகர்களை படம் ஏமாற்றவில்லை.


Next Story