டீமன்: சினிமா விமர்சனம்


டீமன்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: சச்சின் நடிகை: அபர்ணதி  டைரக்ஷன்: ரமேஷ் பழனிவேல் இசை: ரோணி ரபேலின் ஒளிப்பதிவு : ஆனந்தகுமார்

சினிமா இயக்குனர் ஆக விரும்பும் சச்சினுக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதையடுத்து புதிய வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டில் தூங்கும்போது அவருக்கு கெட்ட கனவுகள் வந்து பயத்தை ஏற்படுத்துகிறது. டாக்டரிடம் ஆலோசனை கேட்கும்போது சாதாரண மனபிரம்மைதான் என்று சொல்லி மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கிறார். அதன் பிறகும் சச்சின் அமானுஷ்ய சக்திகள் மூலம் நிம்மதி இழக்கிறார்.

அந்த வீட்டுக்குள் இருக்கும் ரகசிய கதவுதான் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் காரணம் என்று புரிந்து கொள்கிறார். அந்த ரகசிய கதவு பற்றிய உண்மை என்ன? ஆபத்தில் இருந்து சச்சின் எப்படி தப்பிக்கிறார்? என்பது மீதி கதை.

நாயகன் சச்சினுக்கு துள்ளலான வேடம். கதாபாத்திரத்தில் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். நண்பர்கள் அவரை பயமுறுத்தும் காட்சியில் மிரண்டு, நம்மையும் மிரள வைக்கிறார். பயம், கோபம், காதல் உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தி உள்ளார். பேய் பயத்தில் நடுங்கும் காட்சிகளில் நடிப்பு திறமை பளிச்சிடுகிறது

நாயகி அபர்ணதி அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

நண்பர்களாக வரும் கும்கி அஸ்வின், ரவீனா தாஹா, சுருதி பெரியசாமி, பிரபாகரன், அபிஷேக், நவ்யா சுஜி, சலீமா, காவல் அதிகாரியாக வரும் ராஜ்குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நியாயம் செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பிற்பகுதியில் வேகம் எடுக்கிறது.

ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு மொத்த படத்தையும் திகிலுடன் காட்டி விறுவிறுப்பை சேர்த்துள்ளது. நாயகன் பயந்து நடுங்குவது, விசாலாமான வீட்டை வண்ணமயமாக காண்பிப்பது என படம் முழுவதும் அவருடைய கேமரா ஆதிக்கம் செலுத்தி ரசிகர்களை வசப்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் ரோணி ரபேலின் நுணுக்கமான இசை கதையை வேகமாக நகர்த்துவதோடு தரமாகவும் உள்ளது.

நிஜத்தில் நடந்த சம்பவத்தை சினிமாவுக்கான திரைமொழியுடன் எழுதியதோடு இரண்டாவது பாதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்துடன் சொல்லி ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.

திகில் படம் விரும்புகிறவர்களுக்கு டீமன் பயத்தை கொடுப்பது நிச்சயம்.


Next Story