புரோக்கன் ஸ்கிரிப்ட்: சினிமா விமர்சனம்


புரோக்கன் ஸ்கிரிப்ட்: சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 21 Aug 2023 8:32 AM IST (Updated: 21 Aug 2023 8:40 AM IST)
t-max-icont-min-icon
நடிகர்: ரியோ ராஜ், ஜோ ஜியாவாணி சிங் நடிகை: நபீசா  டைரக்ஷன்: ஜோ ஜியாவாணி சிங் இசை: பிரவீண் விஷ்வா மாலிக் ஒளிப்பதிவு : சலீம் பிலால் ஜிதேஷ்

சிங்கப்பூரில் சில டாக்டர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். சைக்கோ கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள். அதேவேளை டிராவல் ஏஜென்சியில் வேலை செய்யும் இளம்பெண், தனது தம்பி ரியோ ராஜுடன் வீடுகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டுகிறார். இதில் ரியோ ராஜ் சைக்கோ கொலையாளியிடம் சிக்குகிறார். கொலையாளி யார்? அவரிடம் இருந்து ரியோ தப்பித்தாரா? என்பதே மீதி கதை.

சைக்கோ கொலையாளியிடம் மாட்டி தவிக்கும் அப்பாவி இளைஞராக ரியோராஜ் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொலையாளி என்று தெரியாமலேயே அவரை அடித்து, உதைத்து பின்னர் உண்மை தெரியும் போது பம்மும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார். ஒவ்வொரு முறையும் தப்பிக்க முயற்சித்து அவர் மாட்டிக்கொள்ளும் இடங்களில் கலகலப்பு. ரியோ ராஜின் அக்காவா வரும் நபீசா இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

படத்தின் முதுகெலும்பு கதாபாத்திரமாக ஜோ ஜியாவாணி சிங் வருகிறார். இடைவெளிக்கு பிறகு அவரது சுயரூபம் திகைக்க வைக்கிறது. போலீசார் துரத்தும் காட்சிகளில் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் சிரிப்பை வரவழைக்கிறது. கிளைமேக்சில் 'அடடா' என்று ஆச்சரியப்பட வைக்கிறார். எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அவர் வலம்வருவது ரசிக்க வைக்கிறது. 'டப்பிங்'கில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சிங்கப்பூர் ரஜினி கதாபாத்திரம் சிரிப்புக்கு கியாரண்டி. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஜெய்னீஷ், பூட்டிய வீட்டுக்குள் இருக்கும் சைக்கோ கொலையாளியாக குணாளன், கண்களால் வசீகரிக்கும் விசாரணை அதிகாரியாக மூன் நிலா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவும், பிரவீண் விஷ்வா மாலிக்கின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

உண்மையான சைக்கோ கொலையாளி? யார் என்று யோசிக்க வைக்கும் திரைக்கதையும், காமெடியும் பலம். காட்சிகளின் நீளமும், லேசான செயற்கை தனமும் பலவீனம். அதையும் மீறி கலகலப்பும், விறுவிறுப்புமாக கதையை நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஜோ ஜியாவாணி சிங். கிளைமேக்ஸ் எதிர்பாராதது.


Next Story