பல்லு படாம பாத்துக்க: சினிமா விமர்சனம்
வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி விரக்தியால் தினேஷ், லிங்கா, சாய் தீனா, ஜகன் உள்ளிட்ட சில இளைஞர் தற்கொலை செய்து கொள்ள காட்டுப்பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஜாம்பிகள் அவர்களை துரத்துகின்றன. அப்போது திடீரென்று வரும் சஞ்சிதா ஷெட்டி ஜாம்பிகளிடம் இருந்து தினேசையும், மற்றவர்களையும் காப்பாற்றுகிறார். அங்கிருந்து இளைஞர்கள் தப்பி ஓடுகிறார்கள்.
தினேசுக்கு சஞ்சிதா மீது காதல் வருகிறது. அதேநேரம் சஞ்சிதாவுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அவரை காப்பாற்ற தினேஷ் போராடுகிறார். அவரது போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா? ஜாம்பிகளின் பின்னணி என்ன என்பது மீதி கதை.
யதார்த்தமான வேடங்களில் நடித்து வந்த தினேஷுக்கு இதில் காமெடி வேடம். அவரும் முடிந்தளவுக்கு காமெடி செய்கிறார்.
நாயகி சஞ்சிதாவுக்கு நாயகனுக்கு இணையான வேடம் கொடுத்துள்ளனர். அரைகுறை ஆடையில் வந்தாலும் ஆட்டம், பாட்டம், நடிப்பு என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். கவர்ச்சிப் பாடலில் கிறங்க வைக்கிறார்.
குணச்சித்திர வேடங்களில் வரும் சாரா, சாய் தீனா, ஜெகன், அப்துல், விஜய் வரதராஜ், லிங்கா உட்பட அனைவரும் கச்சிதம். ஆனால் அவர்கள் பேசும் இரட்டை அர்த்த வசனங்கள்தான் முகம் சுழிக்க வைக்கின்றன. நான் கடவுள் ராஜேந்திரன் சிரிக்க வைத்துள்ளார்.
ஹரீஷ்பேரடியின் கெட்டப், ப்ளாஷ்பேக் ரசிக்க வைக்கிறது. ஹிட்லரின் தோற்றத்தில் செய்யும் நகைச்சுவை அருமை. விஞ்ஞானியாக வரும் ஆனந்தபாபுவும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் பாலு, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு ஆகியோர் டெக்னாலஜி உதவியுடன் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். பின்னணி இசையில் வித்தியாசமான இசையை ஒலிக்கச் செய்துள்ளனர்.
ஜாம்பிகளை வைத்து திகிலாகவும், நகைச்சுவையாகவும் கதை சொல்லி உள்ளார் இயக்குனர் விஜய் வரதராஜ்.