மறைந்த இந்தி நடிகர் ராஜ்கபூரின் பங்களா ரூ.100 கோடிக்கு விற்பனை
மறைந்த இந்தி நடிகர் ராஜ்கபூரின் பங்களா ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்தி திரை உலகில் 1950 மற்றும் 60-களில் முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்த ராஜ்கபூர் 1988-ம் ஆண்டு 63-வது வயதில் மரணம் அடைந்தார். ராஜ்கபூர் சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதுகள் பெற்றவர், இவருக்கு ரந்தீர்கபூர், ரிஷிகபூர், ராஜீவ் கபூர் என்ற மகன்களும், ரிதுகபூர், ரீமா கபூர் ஆகிய மகள்களும் உள்ளனர். ரந்தீர் கபூரின் மகள்களான கரீஷ்மா கபூர், கரீனா கபூர் நடிகைகளாக உள்ளனர். ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூர் இந்தி பட உலகில் இளம் கதாநாயகனாக இருக்கிறார்.ராஜ்கபூருக்கு சொந்தமாக மும்பை செம்பூர் பகுதியில் பங்களா வீடு உள்ளது. ஒரு ஏக்கரில் இந்த பங்களா அமைந்து இருக்கிறது. பங்களாவை ராஜ்கபூர் குடும்பத்தினரால் பராமரிக்க முடியவில்லை.இதையடுத்து பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ராஜ்கபூரின் பங்களாவை விற்பனை செய்துள்ளனர். ரூ.100 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனம் அந்த பங்களாவை இடித்து விட்டு ரூ.500 கோடி திட்ட மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.