நான் வரதுக்குள்ள என் அம்மாவ என்ன பண்ணீங்க.. வெளியானது சந்தானம் பட டிரைலர்..
நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாளன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஒரு பிரபல டிடக்டிவாக மாற சந்தானம் முயற்சித்து வருவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.