சாதியை வலியுறுத்தி படங்கள் எடுக்கப்படுவதில்லை -வைரமுத்து கருத்து


சாதியை வலியுறுத்தி படங்கள் எடுக்கப்படுவதில்லை -வைரமுத்து கருத்து
x

கவிஞர் வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இவர் அடித்தட்டு மக்களின் மனதில் சாதி என்ற பாகுபாடுகளை விதைக்க கூடாது என்று கூறினார்.

திரையுலகில் தன் பாடல் வரிகளால் பலர் மனதில் இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.

சென்னை பெசன்ட் நகரில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது, அடித்தட்டு மக்களின் மனதில் சாதி என்ற பாகுபாடுகளை விதைக்க கூடாது. கல்விக் கூடங்கள் சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள், அந்த நிலையங்களிலேயே சாதி தலை தூக்குவதை நாம் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும், அதற்கு மேல் பெருமையோ இழிவோ கொடுக்க வேண்டாம். சாதி என்ற மாய பிம்பத்தை கடந்து கல்வி, அறிவு, பகுத்தறிவு மற்றும் சமவாய்ப்பு தளங்களில் முன்னேற வேண்டும் என்பதை என் கோரிக்கையாக வைக்கிறேன் என்று கூறினார்.

மேலும், திரைப்படங்கள் சாதியை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படுவது இல்லை, ஏனென்றால் ஒரு சாதியை வலியுறுத்தி எடுக்கும் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை. குறிப்பிட்ட சாதியை குறித்து எடுக்கப்படும் படம் அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் எண்ணிக்கையில் நின்று போகும். அதனால் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறவர்கள், நடிப்பவர்கள், இயக்குபவர்கள் யாரும் ஒரு குறிப்பிட்ட சாதி படத்திற்காக தன்னை அர்ப்பணிப்பது இல்லை. ஆனால், அந்த குறிப்பிட்ட சமூகத்தின் சம்பவங்களை மட்டும் அவர்கள் மையப்படுத்துகிறார்கள் என்றால் சாதி அங்கு தலைதூக்காது" என்று பேசினார்.


Next Story