லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கை நான் தயாரிக்கிறேனா? மனம் திறந்த போனி கபூர்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லவ் டுடே'. இப்படத்தை தற்போது இந்தி மொழியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக அவரே இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தியேட்டர்கள் மூலம் மட்டுமே ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் மேலும் ஓ.டி.டி. உரிமை மூலமும் பெரிய தொகை வந்ததாகவும் தகவல் வெளியானது. அதன்பின்னர் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து படக்குழு வெளியிட்டது.
சில தினங்களுக்கு முன்பு 'லவ் டுடே' படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர் என்றும் இதன் இந்தி பதிப்பில் கதாநாயகனாக நடிக்க வருண் தவானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தி பதிப்பையும் பிரதீப் ரங்கநாதனே இயக்க, அஜித்தின் துணிவு படத்தை தயாரித்து வரும் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசி வந்தனர்.
இந்நிலையில் 'லவ் டுடே' இந்தி ரீமேக் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கை போனிகபூர் தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.