15 நடிகர்-நடிகைகள் மீது பட அதிபர் சங்கம் புகார்


15 நடிகர்-நடிகைகள் மீது பட அதிபர் சங்கம் புகார்
x

நடிகர்-நடிகைகள் 15 பேர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி உள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, "தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் 5 நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளின் கூட்டு கூட்டம் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் முரளி, கதிரேசன், சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்டோரும், பெப்சி தரப்பில் ஆர்.கே.செல்வமணியும் கலந்து கொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகை கோவை சரளா ஆகியோர் நடிகர் சங்கம் சார்பில் பங்கேற்றனர்.

அப்போது முன் பணம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் கொடுக்க மறுத்தும், டப்பிங் பேசாமலும் 15 நடிகர், நடிகைகள் பிரச்சினை செய்வதாக நடிகர் சங்க நிர்வாகிகளிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் புகார் அளித்ததாகவும், அந்த பட்டியலில் தனுஷ், அதர்வா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு, ஜான்விஜய், அமலாபால், சோனியா அகர்வால், ஊர்வசி உள்ளிட்ட பலரது பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகர், நடிகைகளிடம் விளக்கம் கேட்பதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story