பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன்: மலையாள நடிகர் ஜெயசூர்யா


பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன்: மலையாள நடிகர் ஜெயசூர்யா
x

image courtecy:instagram@actor_jayasurya

நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடருவேன். நமது நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது என மலையாள நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

இதில் மலையாள நடிகர் ஜெயசூர்யாவும் சிக்கியுள்ளார். ஒரு நடிகை, நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் அவர் மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன் என மலையாள நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறி இருப்பதாவது;

மனசாட்சி இல்லாத யாருக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது மிக எளிது. இது போன்ற விவகாரங்களில் சிக்கிக் கொள்ளும் போது தான் பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளுவது என்பது பாலியல் துன்புறுத்தலைப் போலவே வேதனையானது என்பதை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

என்னையும், எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் அனைவரையும் இந்த போலியான குற்றச்சாட்டுகள் மிக இயல்பாக சிதைத்து விட்டது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை எனது தரப்பு வழக்கறிஞர் குழு கவனித்துக் கொள்ளும்.

உண்மையை விட பொய் எப்போதும் வேகமாக பயணிக்கும். ஆனால் இறுதியில் உண்மை வெல்லும் என நம்புகிறேன். அமெரிக்காவில் என்னுடைய தனிப்பட்ட வேலைகள் முடிந்தவுடன் இந்தியா திரும்புவேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடருவேன். நமது நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது;

எனது பிறந்தநாளை வேதனைக்குறியதாக மாற்ற பங்களித்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றி. உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் பாவம் செய்தவர்கள் மீது கல்லெறியட்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story