"கவர்ச்சி காட்டுவதில் என்ன தவறு?'' - மனம் திறக்கிறார், சாக்ஷி அகர்வால்
ஒரு படப்பிடிப்புக்காக சென்ற சாக்ஷி அகர்வாலை மடக்கி பிடித்து பேட்டி கண்டோம். கோபமே படாமல் சிரித்த முகத்துடன் நம்மிடம் பேசினார்.
'ராஜா ராணி', 'காலா', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர், சாக்ஷி அகர்வால். 'பகீரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். ஆளை பார்த்தால், 'கொஞ்சம் கெத்து காட்டுவாரோ...' என்பது போல தோற்றம் கொண்ட சாக்ஷி, பழகிபார்த்தால் 'என்ன மச்சா...' என்று சொல்லும் அளவுக்கு கலகலப்பு மிக்கவர்.
ஒரு படப்பிடிப்புக்காக சென்ற சாக்ஷி அகர்வாலை மடக்கி பிடித்து பேட்டி கண்டோம். கோபமே படாமல் சிரித்த முகத்துடன் நம்மிடம் பேசினார். பெயர் போலவே அவரது பேச்சிலும், குணத்திலும் 'இனிப்பு' சுவை தான் காணப்பட்டது. என்ன கேள்வி கேட்டாலும், சிரித்த முகம் மாறாமல் அவர் நமக்கு பதில் அளித்தார். 'தினத்தந்தி'க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு:-
ரொம்ப அழகாக இருக்கீங்களே... பாலில் குளிப்பீங்களோ...
அய்யய்யோ... அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது (வெட்கப்பட்டுக்கொண்டே). மனசு தான் காரணம். மனசை இளமையா வச்சுக்கிட்டாலே போதும்.
அடுத்து என்ன படம் நடிக்கிறீங்க...
'ரிங்... ரிங்...' என்ற படத்தில் நடிக்கிறேன். 'கெஸ்ட்-2', 'தி நைட்', 'புரவி', '120 ஹவர்ஸ்', 'குறுக்கு வழி', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். ஒரு வெப் தொடரிலும் நடிக்கிறேன்.
உங்க குடும்பத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் வேறு யாராவது?
யாருமே இல்லைங்க... நான் தான் முதல் ஆள். நாங்க மார்வாடி பேமிலி. எங்க சமுதாயத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனாலும் அந்த கட்டுப்பாடுகளையெல்லாம் கடந்தேன். காரணம் என் மீது, நான் பின்பற்றும் ஒழுக்கத்தின் மீது என் பெற்றோர் வைத்த நம்பிக்கை தான்.
உங்கள் பொழுதுபோக்கு என்ன?
டைம் கிடைச்சா ஜிம்முக்கு ஓடிடுவேன். தினசரி 1 மணி நேரமாவது ஜிம்மில் இருக்கணும்னு ஆசைப்படுவேன். அப்புறம் கிடைக்கும் நேரத்தில் புக்ஸ் படிப்பேன். ஷாப்பிங் போவேன். வெயில் அதிகமாக இருந்தா, வீட்டிலேயே சமைக்க ஆரம்பிப்பேன். ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு பொழுதை கழிப்பது எனக்கு பிடிக்காது. ஓடிக்கொண்டே இருப்பேன்.
ஸ்வீட் போல பேசுறீங்க... என்ன ஸ்வீட் விரும்பி சாப்பிடுவீங்க...
'ரசமலாய்'னா எனக்கு உயிரு... கேரட் அல்வாவும் ரொம்ப பிடிக்கும்.
சினிமாவுக்கு வந்த அனுபவம் குறித்து சொல்லுங்களேன்...
நான் என்ஜினீயரிங் படிப்பில் கோல்டு மெடல் வென்றவள். திடீரென மாடலிங் துறையை தேர்வு செய்தேன். அதன்மூலம் விளம்பர வாய்ப்புகளும், பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பும் வந்தது. மெல்ல மெல்ல சினிமாவுக்கும் வந்தாச்சு... இதற்கெல்லாம் முன்பாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 6 மாதங்கள் நடிப்புகலை தொடர்பாக படித்தேன்.
யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
தனுஷ் தான். நடிப்பிலும், நிஜத்திலும் அவர் நல்ல மனிதர். அதேபோல எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. ரொம்ப ஸ்வீட்டான நடிகை. சினிமாவின் ஏஞ்சல் என்றே சொல்வேன். அவரை பார்க்கும் அனைவருக்கும் அவர் மீது லவ் ஏற்படும். எனக்கும் தான்... (கண்ணடிக்கிறார்)
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் சினிமாக்களில் எதில் அதிக ஈடுபாடு உண்டு?
எந்த மொழியாக இருந்தாலும், நம்ம தொழில் நடிக்கிறது தான். அந்தந்த சூழலுக்கு ஏத்தமாதிரி குறை சொல்லாத மாதிரி நடிக்கணும். சினிமாவில் மொழி இருக்கலாம். நடிப்பில் மொழி வேறுபாடு இல்லை, இருக்கவும் கூடாதுங்குறது நம்ம பாலிசி.
வேற என்ன பாலிசிலாம் வச்சுருக்கீங்க...
அப்படி ரொம்ப கொள்கை வகுத்து செயல்படுவது கிடையாது. நாம என்ன செய்யணும் என்பது எல்லோரின் நெற்றியிலும் தலை எழுத்தாக எழுதப்பட்டிருக்கிறது. அதுப்படி தான் நடக்கும். நான் சினிமாவில் வந்தது போல...
நீங்க பிகினியில் கடற்கரையில் வலம் வந்தது பற்றி...
அடுத்து இங்க தான் வருவீங்கனு எனக்கு தெரியும்... ஹவாய் தீவில் நான் பிகினியில் ஆட்டம் போட்டேன் தான். அது ஹவாய் தீவுங்க... அங்கு வரும் எல்லோருமே அப்படித்தான் டிரஸ் பண்ணுவாங்க... நான் என் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அங்கு கழித்தேன். பிகினியில் சுத்துனது குற்றமாங்க... எனக்கும் பக்குவம் இருக்கு. சென்னையில் நான் எப்படி இருக்கேன். இப்படியா சுத்துறேன்? இல்லையே... இடத்துக்கு ஏற்றபடி, அந்தந்த பழக்க வழக்கங்களுக்கு ஏற்றபடி என்னை மாத்திப்பேன். எனக்கும் தமிழ் மண்ணின் பெருமை தெரியும்.
திரை பிரபலங்கள் அரசியலுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீங்க...
அது அவரவர் தனிப்பட்ட விஷயம். தங்களால் ஜெயிக்க முடியும், சாதிக்க முடியும்னு நம்பும் நடிகர்-நடிகைகள் அரசியலுக்கு வரலாம்.
பேய் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கு. திகில் படங்களில் கண்களால் பேசும் வித்தையையும், பல்வேறு முக பாவனைகளையும் வெளிப்படுத்த முடியும். அதேபோல வில்லி வேடங்கள் கிடைத்தாலும் தயார் தான்.
காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களது காதல் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்...
காதல் அழகானது. ஆழமானது. ஆனால் சிலர் காதல் பற்றி தவறான புரிதலில் இருக்கிறார்கள். எனக்கும் நிறைய காதல் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் காதல் பற்றி புரிதல் இல்லை. அதில் நம்பிக்கையும் இல்லை. எனவே நிராகரித்துவிட்டேன்.
தமிழக கலாசாரங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? எதை பின்பற்றுகிறீர்கள்?
ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தான். நானும் அதில் உறுதியாக இருக்கிறேன்.
உங்களுக்கு மிகவும் பிடித்த உடை எது?
சந்தேகமே வேண்டாம். புடவை தான். பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு புடவையில் தான் செல்வேன். தலைநிறைய பூ வச்சு, பொட்டு வச்சு, புடவைகட்டி தமிழ் பெண்ணாக செல்லும்போது எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சி ரொம்ப அலாதி தான்.
யார் உங்களது ரோல் மாடல்?
நடிகை ஸ்ரீதேவி. அவரை பார்த்து தான் நடிக்கவே எனக்கு ஆசை வந்தது.
நீங்க ஒரு வெறித்தனமான போட்டோஷூட் பிரியை தானே...
உண்மை தான். அதிலென்ன தவறு இருக்கு. பொழுதுபோக்கு தாண்டி, போட்டோஷூட் ஒரு நல்ல நடிப்புக்கான பாடம்.
கதை தேர்வு குறித்து...
கதைகளை நானே தான் தேர்வு செய்வேன். முடிவு எடுக்கும் உரிமையை பெற்றோர் எனக்கு தந்திருக்கிறார்கள்.
சினிமாவில் அடையவேண்டிய லட்சியம் என்னவோ...
மக்கள் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும். நல்ல நடிகையாக திகழவேண்டும். அவ்வளவு தான்..
இப்படி சொல்லி, சிரிப்புடன் நமக்கு விடைகொடுத்தார், சாக்ஷி.
நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியமா?
இது அவரவர் மனநிலையை பொருத்தது என்றாலும், ஏன் அவசியமாக இருக்கக்கூடாது? என்பதே என் கேள்வி. கதைக்கு தேவைப்படும் பட்சத்தில், அந்த கதைக்கு முக்கியத்துவம் என்ற நிலையில் கவர்ச்சியாக நடிக்கலாம், அதில் தவறில்லை. சினிமாவில் வரையறை என்பதே கிடையாது. பன்முகத்தன்மை என்பதும் நடிகைக்கு அவசியம் தான்.
பயோ-டேட்டா
பெயர் - சாக்ஷி அகர்வால்
செல்லமாக அழைப்பது - சாக்ஷிமா, சாக்ஸ், சாக்சு
தந்தை பெயர் - காந்திலால் அகர்வால்
தாய் பெயர் - சுதா அகர்வால்
பிறந்த தேதி - ஜூலை 20
பிறந்த இடம் - அல்மோரா, உத்தரகாண்ட்
உயரம் - 5 அடி 4 அங்குலம்
எடை - 54 கிலோ
பிடித்த உணவு - ரசமலாய்
பிடித்த நடிகர் - தனுஷ்
பிடித்த நடிகை - நயன்தாரா
பிடித்த நிறம் - பச்சை
பிடித்த விளையாட்டு - கிரிக்கெட்