ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறோம் – 'பி.டி.சார்' படம் பற்றி ஹிப்ஹாப் ஆதி பேச்சு


ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறோம் – பி.டி.சார் படம் பற்றி ஹிப்ஹாப் ஆதி பேச்சு
x

‘பி.டி.சார்’ பட கதையை ஐசரி கணேஷ் முதலில் ஒப்புக் கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக் கருத்தை நாம்தான் சொல்ல வேண்டுமென அவர் சொன்னார் என்று ஹிப்ஹாப் ஆதி கூறினார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள படம் 'பி.டி.சார்'. அவரே இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். அவர் இசையமைக்கும் 25-வது படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படம் வரும் மே 24-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நடிகர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசும்போது, "எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை-4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

இந்த 'பி.டி.சார்' படம் எனக்கு மிக நிறைவான படமாக இருந்தது. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. இந்தப் படத்தின் 'குட்டிப் பிசாசே' பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு கிளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி.

இந்தக் கதையை முதலில் ஒப்புக் கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக் கருத்தை நாம்தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப் பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன். குடும்பத்தோடு வந்து பாருங்கள். கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள்.." என்றார்.

1 More update

Next Story