ஏஐ மூலம், மறைந்த பாடகர்களின் குரல்.. 'லால் சலாம்' சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்


ஏஐ மூலம், மறைந்த பாடகர்களின் குரல்.. லால் சலாம் சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்
x

பாடகர்களின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ளதாக ரசிகர்கள் புகாரளித்து வந்தனர்.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லால் சலாம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது மறைந்த பின்னணி பாடகர்கள் பம்பா பாக்கியா, சாகுல் ஹமீது குரல்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 'திமிரி எழுடா' பாடல் வெளியிடப்பட்டது. சமீபகாலமாக ஏஐ பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகமாக இருந்து வருகின்றன. இந்த சமயத்தில் 'லால் சலாம்' பட பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களின் குரல் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பாடகர்களின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகாரளித்து வந்தனர்.

இந்த சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளித்து உள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதற்கு அவர்களது குடும்பத்தினரிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. மேலும் அதற்கான சன்மானமும் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஏஐ என்பது ஒரு அற்புதமான தொழில்நுட்பம். அதை சரியாக பயன்படுத்தும்போது எந்த ஒரு தொல்லையோ அல்லது அச்சுறுத்தலோ இருக்காது' என்று பதிவிட்டு உள்ளார்.


Next Story