சரித்திர கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை பகிர்ந்த விக்ரம், கார்த்தி
பொன்னியின் செல்வன் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் சரித்திர கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை விக்ரம் மற்றும் கார்த்தி பகிர்ந்தனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ள நிலையில் அந்த படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். இதில் நடிகர் விக்ரம் பங்கேற்று பேசும்போது, "இந்த படத்தின் பிரமிப்பில் இருந்து வெளியே வந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள்' என்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கி இருந்தேன். பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த ஒவ்வொருவரும் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், கற்பனை செய்து வைத்திருந்த முகங்கள் எங்களின் முகமாக மாறிவிட்டது. நடிகர்களான நாங்கள், எத்தனையோ வேடத்தில் தோன்றியிருக்கிறோம். ஆனால் வாசகர்களின் கற்பனையில் நீண்ட காலமாக இருந்த ஒரு முகமாக நாங்கள் மாற்றம் பெற்றிருப்பது என்பது புதிது. இந்த படத்தை பார்த்த பிறகு எல்லோக்கும் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது" என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, "பொன்னியின் செல்வனில் சரித்திர கதாபாத்திரங்களில் நடித்த அனுபவங்கள் மன நிறைவை தருகிறது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம். இந்த படத்தின் மூலம் மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது சந்தோஷமாக உள்ளது" என்றார். நடிகர் ஜெயம்ரவி, டைரக்டர் மணிரத்னம், தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன், தமிழ்க்குமரன் ஆகியோரும் பேசினர்.