சிம்பு ஆனந்தக் கண்ணீர் விடுவதைப் பார்க்க வேண்டும் - கமல்
‘‘வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவில், சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்கவேண்டும்” என்று கமல்ஹாசன் பேசினார்.
சினிமா படவிழா
சிம்பு நடித்துள்ள புதிய படம், ''வெந்து தணிந்தது காடு". இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்துள்ளார். வேல்ஸ் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
''வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள், ''தழல் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ". அதுபோல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், என்னை தந்தை போல் என்பார். அவருக்கு, நான் தனியாக ஏதும் செய்யவில்லை.
நல்ல படம்
தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம்தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கைவிட்டது இல்லை. தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.
வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்துவிட்டது. வேல்ஸ் பிலிம்சில் படம் செய்ய கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி வாய்ப்புகளை நான் 'மிஸ்' செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.
சிம்பு பேச்சு
விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, "எனக்கு இந்த மாதிரி பிரமாண்ட விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை. இந்த பிரமாண்டத்தை பார்த்ததும் நம் விழாதானா என சந்தேகம் வந்துவிட்டது. இங்கு கமல்ஹாசன் சார் வந்திருக்கிறார். அவர் எனது விண்ணை தாண்டி வருவாயா விழாவிற்கு வந்திருந்தார். அந்தப்படம் போல் இதுவும் ஹிட்டாகும் என நம்புகிறேன்.
கவுதம் வாசுதேவ் மேனனுடன் இது மூன்றாவது படம். நாங்கள் சேர்ந்தால் அதில் ஒரு மேஜிக் நிகழ்ந்துவிடும். ஏதாவது புதிதாக செய்வோம். இந்தப்படத்திலும் அது இருக்கும். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு எப்போதும் நல்ல பாடல்கள் தான் தருவார். அவருக்கு நன்றி. இந்த படத்தில் நான் 19 வயது பையனாக நடித்திருக்கிறேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்'' என்றார்.
ஐசரி கணேஷ்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, "கமல்ஹாசன் என் கலை குருவாக இருப்பவர். சிம்பு இந்தப்படத்திற்காக உடல் எடையை குறைத்து, மிக கடினமாக உழைத்துள்ளார். வேல்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் வெளிவரும் படங்கள் நல்ல படங்களாக இருக்கும். இந்தப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் நன்றாக எடுத்துள்ளார். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி வெளியிடுகிறார். அது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது'' என்றார்.
விழாவில் நடிகர்கள் ஜீவா, நாசர், ஆர்.ஜே.பாலாஜி, டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை ராதிகா சரத்குமார், படத்தின் கதாநாயகி சித்தி, ஆர்.பி.சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.