தமிழகத்தில் 600-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகும் 'வெந்து தணிந்தது காடு'
தமிழகத்தில் மட்டும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் வருகிற நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக 200-க்கும் அதிகமான அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. நடிகர் சிலம்பரசனின் திரைப்பயணத்தில் அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் படம் என்பதால், வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டும் என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.