'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகை பிடிக்கும் காட்சி... நடிகர் தனுஷ் மீதான மனு தள்ளுபடி
நடிகர் தனுசுக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார் அளித்தார்.
புது டெல்லி,
நடிகர் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' என்ற திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அதில், புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை.
இதையடுத்து, இந்த படத்தை தயாரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார் அளித்தார்.
இந்தநிலையில், சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், புகாரை ரத்து செய்யக்கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு சரியே. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.