பிரமாண்டமாக நடைபெற்ற 'அக்கரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா
எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள 'அக்கரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
சென்னை,
குன்றம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "அக்கரன்". விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது,
இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்கள்தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குனரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள்தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். வெண்பாவும், பிரியதர்ஷினியும் என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள், என்றார்.
இயக்குனர் அருண் கே பிரசாத் பேசியதாவது,
படத்தில் எம் எஸ் பாஸ்கர் அப்பா அட்டகாசமாக நடித்துள்ளார். இப்படம் புதுமையாக இருக்கும். இப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி, என்றார்.
நடிகை வெண்பா பேசியதாவது,
எனக்கு இந்தப் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது, நான் இதுவரை லவ், செண்டிமெண்ட் மாதிரியான படங்கள் மட்டுமே செய்து இருக்கிறேன். இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எம் எஸ் பாஸ்கர் சார் நடிப்பிற்கு எல்லோருமே ரசிகர்கள்தான் நானும் அதில் ஒருத்தி. அவருக்கு மகளாக நடிக்கிறேன் என்றபோது நெர்வஸாக இருந்தது, எங்களுடன் எளிமையாகப் பழகி அழகாகச் சொல்லித்தந்தார். அவருடன் நடித்த அனுபவம் மிக மகிழ்ச்சியாக இருந்தது, என்றார்.
நடிகை பிரியதர்ஷினி பேசியதாவது,
ஜீவன் மணி எனும் இயக்குனர் என்னை வைத்து ஷார்ட் பிலிம் எடுத்தார் அதன் மூலம்தான் இந்த வாய்ப்பு வந்தது. தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள், என்றார்.