தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த சாமி பட வில்லன்
கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக பிறரின் துணையோடு நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 81 வயதாகும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே தெலங்கானா மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.
மனைவி மற்றும் உதவியாளர் ஒருவருடன் வருகை தந்த அவருக்கு, வாக்குச்சாவடிக்குள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற அவரது உறுதியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.
2003-ம் ஆண்டில் சாமி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கேரக்டர் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.